ஆண்கள் ஐபிஎல் -லை மிஞ்சும் பரபரப்பு ; திக் திக் ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தியது உத்தர பிரதேசம்!

0
1589
WPL

பெண்கள் ஐபிஎல் நடப்பு முதல் சீசனில் விடுமுறை நாளான ஞாயிறு இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்ற முடிந்துள்ளன. பெங்களூர், டெல்லி அணிகள் மோதிய போட்டியில் டெல்லி அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

இதைத்தொடர்ந்து டி ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் உத்தரப்பிரதேச அணியை எதிர்த்து குஜராத் அணி தனது இரண்டாவது போட்டியில் களம் கண்டது. நேற்று நடந்த முதல் போட்டியில் மும்பை அணியிடம் படுதோல்வியை சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்த குஜராத் அணிக்கு நேற்று காலில் காயமடைந்த அந்த அணியின் கேப்டன் டெத் மூனி அணியில் இடம்பெறவில்லை. துவக்க வீராங்கனையாக வந்த மேகனா 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பிறகு ரன் வேகம் தடைபட, ஹர்லின் டியோல் அதிரடியாக ஏழு பவுண்டரிகளுடன் 32 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கார்டனர் 25 ரன்கள், ஹேமலதா 21 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி ஆறு விக்கட்டுகளுக்கு 169 ரன்கள் எடுத்தது.

அடுத்து 170 ரன்களை நோக்கி களம் இறங்கிய உத்தரப்பிரதேச அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி, செராவத் இருவரும் ஏமாற்றம் அளித்தார்கள். அடுத்து வந்த நட்சத்திர ஆஸ்திரேலிய வீராங்கனை தகிலா மெக்ராத் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார்.

இதற்கு அடுத்த ஜோடி சேர்ந்த கிரன் நவிக்கிரே 43 பந்துகளில் 53 ரன்கள் எடுக்க உத்தரப்பிரதேச அணிக்கு ஓரளவுக்கு நம்பிக்கை வந்தது. ஆனால் அடுத்தடுத்து இவரும், சுமாராய் களத்தில் நின்ற தீப்தி சர்மாவும் வெளியேற அழுத்தம் உருவானது. இதற்கு அடுத்து உடனே உள்ளே வந்த சிம்ரனும் முதல் பந்திலேயே வெளியேற உத்திரபிரதேச அணியின் வெற்றி கேள்விக்குறியானது.

- Advertisement -

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியாவின் கிரேஸ் ஹாரிஸ் மற்றும் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சு வீராங்கனை எக்லஸ்டன் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள். அப்பொழுது அணியின் வெற்றிக்கு 26 பந்துகளில் 65 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நேரத்தில் அதிரடியாக விளையாடிய கிரேஸ் ஹாரிஸ் பௌண்டரிகளாக பறக்க விட்டார். ஒரு கட்டத்தில் வெற்றிக்கே வாய்ப்பு இல்லாத நிலையில் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற அளவுக்கு ஆட்டம் வந்தது!

இந்த நிலையில் கடைசி ஓவரை சந்தித்த கிரேஸ் ஹாரிஸ் முதல் பந்தில் சிக்ஸர், அடுத்த பந்தில் வைடு, அதற்கடுத்த பந்தில் இரண்டு ரன்கள் , அதற்கடுத்த பந்தில் பவுண்டரி, அடுத்த பந்தில் வைட், அடுத்த பந்தில் பவுண்டரி, ஐந்தாவது பதில் பிரம்மாண்டமான சிக்ஸர் என அபாரமாக ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம் உத்தர பிரதேச அணி தனது முதல் ஆட்டத்தில் வெற்றியைப் பெற்றுக் கொண்டது. குஜராத் அணி தனது இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.

இறுதிவரை களத்தில் நின்ற கிரேஸ் ஹாரீஸ் 26 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக நின்ற எக்லஸ்டன் 12 பந்தில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 22 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்றார். இந்த ஜோடி அதிரடியாக 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை தேடி தந்திருக்கிறது. இந்தப் போட்டியின் விறுவிறுப்பு ஆண்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் விறுவிறுப்பை விட அதிகமாகவே இருந்தது என்று சொல்லலாம்!