இன்று மும்பையில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் இப்ராகிம் ஜட்ரன் 129 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணியின் முதல் ஏழு விக்கெட்டுகள் 91 ரன்களில் விழுந்து விட்டது. இந்த இடத்திலிருந்து ஆஸ்திரேலியாவில் வெற்றிக்கு சாத்தியமே இல்லை என்றுதான் பலரும் நினைத்திருந்தனர். ஆனால் மேக்ஸ்வெல் தனி ஒரு ஆளாக அதை மாற்றி விட்டார்.
இன்று மேக்ஸ்வெல் ஆரம்பத்திலேயே கொடுத்த ஒரு எளிய கேட்ச் வாய்ப்பை முஜீப் தவற விட்டார். அதைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தவர், கடைசியாக அணியை 6 அடித்து வெற்றி பெற வைக்கும் பொழுதுதான் நிறுத்தினார்.
இன்றைய போட்டியில் மேக்ஸ்வெல் 128 பந்துகளை சந்தித்து 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் 201 ரன்கள் குவித்து அசத்தினார். உலக கோப்பையிலும் ஒட்டுமொத்தமாகவும் ஒரு நாள் கிரிக்கெட்டில் ரன்னை துரத்தும் போது அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவாகும்.
ஆட்டநாயகன் விருது பெற்ற மேக்ஸ்வெல் பேசும் பொழுது “இங்கு பீல்டிங்கில் இருக்கும் பொழுது அதிக வெப்பம் இருந்தது. மேலும் வெப்பம் அதிகம் இருந்த காரணத்தினால் நான் தேவையான அளவு உடற்பயிற்சி செய்யவில்லை. இதன் காரணமாக எனக்கு தசைப்பிடிப்பு வந்து விட்டது. நான் கொஞ்சம் பின் வாங்கி என்னுடைய கால்களில் இருந்த தசைப்பிடிப்பிலிருந்து வெளியே வர முயற்சி செய்தேன்.
ஏழு விக்கெட்டுகளை சீக்கிரம் விழுந்ததும் பேட்டிங்கில் கொஞ்சம் நின்று ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எனக்கு வழங்கப்பட்ட ஒரு எல்பிடபிள்யூ முடிவில் பந்து ஸ்டெம்புக்கு மேல் சென்றது. அதுதான் என்னை அதிகம் சுறுசுறுப்பாக்கிவிட்டது. அங்கிருந்துதான் அடித்தேன்.
இங்கு இரண்டாம் பகுதியில் விளக்குகளின் கீழ் ஆடுகளத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆகி வந்தது. அதை அவர்கள் மிக நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
நான் விளையாடியது வாய்ப்பே இல்லாத ஒரு ஆட்டம் என்றால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் எனக்கு ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தது. இன்று அந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டதற்காகப் பெருமைப்படலாம். நாங்கள் முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்கவும் நிறைய விமர்சனங்கள் வந்தது. ஆனால் நாங்கள் ஒரு குழுவாக நம்பிக்கையோடு அங்கிருந்து 6 போட்டிகளை வென்று வந்திருக்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!