என்னோட சொந்த நாட்டு டீம் கூட இவ்ளோ காசு கொடுத்து என்னை பாத்துக்கல; கேகேஆர் டீம் எனக்கு பண்ண உதவிக்கு, வாழ்நாள் முழுக்க விசுவாசமா இருப்பேன் – உருக்கமாக பேசிய ஆண்ட்ரே ரஸ்ஸல்!

0
2634

என்னுடைய நாட்டின் கிரிக்கெட் வாரியமே முன்வந்து எனக்காக செய்யாத போது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் முன் வந்து எனக்காக செய்து கொடுத்தார்கள். இந்த ஒரு விஷயத்திற்காகவே அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று பேசியுள்ளார் ஆண்ட்ரே ரஸ்ஸல்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மிடில் ஆர்டரில் பல ஆண்டுகளாக பலம் சேர்த்து வரும் ரஸ்ஸல், தனது பலம் மிக்க பேட்டிங்கால் பல்வேறு போட்டிகளை வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு முதல், ஒன்பது வருடங்களாக கொல்கத்தா அணியில் பயணித்து வரும் ரஸ்ஸல் மிகமிக முக்கிய வீரராக இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கும் தனக்கும் இருக்கும் பந்தம் மற்றும் சில முக்கியமான நிகழ்வுகளை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார் ரஸ்ஸல். அப்போது பேசியதாவது:

“எனக்கு கணுக்காலில் அடிபட்டிருந்தபோது, ஐபிஎல் இல்லாத நேரம் அது. அந்த சமயத்தில் நான் விளையாடும் மற்ற டி20 அணிகளோ அல்லது எனது சொந்த நாட்டின் கிரிக்கெட் வாரியமோ எனது காலில் அடிபட்டதற்கு உதவ முன் வரவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் அதிக செலவுகளை ஏற்றுக்கொண்டு உயரிய சிகிச்சையை எனக்கு கொடுத்தது. அந்த தருணத்தை என்னால் இன்றளவும் மறக்க இயலாது.

என்னால் மற்ற ஐபிஎல் அணிகளில் விளையாடுவது என்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அந்த அளவிற்கு நெருக்கமாக மாறிவிட்டது. நான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் வெங்கி(கேகேஆர் உரிமையாளர்) உடன் எப்போதும் தொடர்பில் இருப்பேன். அவர் மீது நான் உயரிய மரியாதை வைத்திருக்கிறேன். இந்த அணிக்கு வந்து ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் நெருக்கம் ஆகிக்கொண்டே இருக்கிறது.” என்று உணர்வு பூர்வமாக பேசினார்.

- Advertisement -

ஆண்ட்ரே ரஸ்ஸல், 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. இந்த சீசனிலும் எட்டு போட்டிகளில் 108 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். சராசரியாக 18 ரன்கள் வைத்திருக்கிறார். மேலும் பந்துவீச்சிலும் முழுமையாக நான்கு ஓவர்கள் வீச முடியவில்லை. ஒரு போட்டியில் மட்டுமே நான்கு ஓவர்கள் முழுமையாக இதுவரை வீசியுள்ளார். ரஸ்ஸல் உடல் அளவில் சற்று சிக்கலை சந்தித்து வருவது கொல்கத்தா அணிக்கு பின்னடைவு தந்திருக்கிறது.