“இந்தியா கூட ஐந்து விக்கெட் எடுக்காம எதையும் செய்ய மாட்டேன்!” – ஷாகின் ஷா அப்ரிடி ரசிகர்களிடம் சபதம்!

0
771
Shaheen

கிரிக்கெட் உலகத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி, நாளை உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது!

இந்த போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் குஜராத் அகமதாபாத்தில் முகாமிட்டு தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரு தரப்பிலும் கடுமையான பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது.

- Advertisement -

அதேவேளையில் உலகக் கோப்பை துவக்க விழாவை நடத்தாத பிசிசிஐ, இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக ஒருபுறம் மேற்கொண்டு வருகிறது. இது இன்னொரு புறம் பிசிசிஐ மீது கடுமையான விமர்சனங்களை உலகளாவி உருவாக்கி இருக்கிறது.

இன்று பாகிஸ்தான் பயிற்சி முகாமில் சில குறிப்பிட்ட விஷயங்களில் அவர்கள் அதிக கவனம் எடுத்து பயிற்சி செய்து வந்தார்கள். ஃபீல்டிங் பயிற்சியாளர் உடன் ஒரு சிறிய ஸ்டெம்பை வைத்து அதை குறி வைத்து அடிக்கும் பயிற்சியை அதிகம் செய்து வந்தார்கள். சரியாக அடிப்பவர்களுக்கு உடனுக்குடன் பாராட்டுகள் களத்தில் தெரிவிக்கப்பட்டது.

இன்னொரு பக்கத்தில் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தலைமையில் சதாப் கான், முகமது நவாஸ், ஆகா சல்மான், இப்திகார் அகமது ஆகியோருக்கு சுழற் பந்துவீச்சு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.

- Advertisement -

நால்வருக்கும் ஆடுகளத்தில் 4 மீட்டர் மற்றும் 6 மீட்டர் இடங்களில் அடையாளம் இடப்பட்டு, அந்த இடங்களில் சரியாக பந்தை விழவைத்து தொடர்ச்சியாக பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தன்னுடைய பந்து வீச்சு மற்றும் பில்டிங் பயிற்சியை முடித்துக்கொண்டு பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி வெளியேறினார்.

அந்த சமயத்தில் ரசிகர்கள் அவரிடம் ஒரு செல்பி எடுக்க கேட்டுக் கொண்டார்கள். அதற்கு நின்று பதில் அளித்த ஷாகின் ஷா அப்ரிடி ” நிச்சயமாக நான் செல்பி எடுப்பேன். ஆனால் நான் ஐந்து விக்கெட்டுகள் எடுத்த பிறகுதான் செய்வேன்!” என்று கூறிவிட்டு நகர்ந்தார். பாகிஸ்தான் முகாம் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது!