ENGvsWI.. 2 வருட கம்பேக்.. அடித்து நொறுக்கிய ரசல்.. சரண்டர் ஆன இங்கிலாந்து.. வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!

0
667
Russell

தற்போது இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலில் விளையாடியது. இந்தத் தொடரை ஒன்றுக்கு இரண்டு என இங்கிலாந்து இழந்தது.

இந்த நிலையில் நேற்று இரண்டு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த பில் சால்ட் மற்றும் கேப்டன் பட்லர் இருவரும் அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்கள். இந்த ஜோடி 6.1 ஓவரில் 77 ரன்கள் குவித்தது. பில் சால்ட் 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஜோஸ் பட்லர் 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து நீண்ட பேட்டிங் லைன் அப்பை வைத்திருக்கும் இங்கிலாந்து அதனால் எந்தப் பயனும் இல்லாமல் அப்படியே சரிந்தது. வில் ஜேக்ஸ் 17, பென் டக்கெட் 14, லியாம் லிவிங்ஸ்டன் 27, சாம் கரன் 13 ரன்கள் எடுக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.

இறுதியாக இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 171 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தரப்பில் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஆண்ட்ரே ரசல் நான்கு ஓவர்களுக்கு 19 ரன்கள் மட்டும் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். அல்சாரி ஜோசப்பும் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்கம் தர வந்த பிரண்டன் கிங் 22 (12), கைல் மேயர்ஸ் 35 (25), ஷாய் ஹோப் 36 (30), நிக்கோலஸ் பூரன் 13 (12), சிம்ரன் ஹெட்மயர் 1 (4), ரொமரியோ செப்பர்ட் 0 (1) என இறுதி கட்டத்தில் அடுத்தடுத்து வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கேப்டன் ரோமன் பவல் உடன் இரண்டு வருடம் கழித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பி இருக்கும் ஆண்ட்ரே ரசல் ஜோடி சேர்ந்தார். இருவரும் எந்தவித நெருக்கடியும் இல்லாமல், தங்களுடைய இயல்பான அதிரடியில் 18.1 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வெல்ல வைத்தார்கள்.

கேப்டன் ரோமன் பவல் 31 (15), ஆண்ட்ரே ரசல் 29 (14) என அதிரடியாக ரன்கள் எடுத்தார்கள். 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் கலக்கிய ரசல் ஆட்டநாயகன் விருது வென்றார். இங்கிலாந்து தரப்பில் ரேகன் அகமத் மூன்று விக்கெட் மற்றும் ஆதில் ரஷீத் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்!