“இங்கிலாந்து ஒரு குறிப்பிட்ட பாணியிலான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறது…’: “ஆனால் இந்த நிபந்தனைக்கு அவர்கள் மதிப்பளித்தே ஆக வேண்டும்” – பாஸ்பால் மீது அஸ்வின் நேர்மையான விமர்சனம்

0
985

இங்கிலாந்து அணி சமீப காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி இருக்கிறது. முன்னாள் கேப்டன் ஜோ ரூட் தலைமையில் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவி வந்தது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இயான் மார்கன் தலைமையில் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் தோல்விக்கு பிறகு தாக்குதல் பாணி ஆட்டத்தை கடைப்பிடித்து உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்த துவங்கியது இங்கிலாந்து அணி.

இந்த அணுகு முறையில் விளைவாக 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றி நடப்புச் சாம்பியன் ஆக இருந்து கொண்டிருக்கிறது இங்கிலாந்து. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கைப்பற்றியுள்ளது. இதே எழுச்சியை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் நிலைநாட்டுவதற்காக டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோர் இணைந்து தாக்குதல் பாணி யுக்தியை அறிமுகப்படுத்தினர்.

- Advertisement -

இந்த புதிய திட்டத்திற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. தங்களது நாட்டில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர்களை வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்த ஆடிய இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளையும் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியது. கடந்த மாதம் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து ஆடிய இங்கிலாந்து 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பாஸ்பால் என்று கிரிக்கெட் வர்ணணையாளர்களால் அடையாளப்படுத்தப்படும் இந்த அணுகுமுறை பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களிடமும் கிரிக்கெட் வல்லுனர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சிகர்களும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் வருங்கால அணுகுமுறை இதுதான் என பாஸ்பால் அணுகுமுறையை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பிரபல ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் பாஸ்பால் அணுகுமுறை பற்றி தனது யூடியூப் சேனலில் தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்

இது பற்றி தனது கருத்தை பகிர்ந்து உள்ள அஸ்வின்” இந்த அணுகுமுறை இங்கிலாந்து அணிக்கு பல அற்புதங்களை செய்திருக்கிறது என்பதை நாம் மறக்க முடியாது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சூழ்நிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மை ஆகியவை ஒரு அணியின் அணுகுமுறையை வரையறுக்கும் காரணிகளாக இருக்கின்றன. அதுபோன்ற சூழ்நிலைகளில் ஒரு அணியின் ஆட்ட அணுகுமுறை சில நேரங்களில் மாற்றப்பட வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும்”என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசி இருக்கும் அஸ்வின்” இங்கிலாந்து அணி ஒரு குறிப்பிட்ட பானியிலான ஆட்டத்தை விளையாட விரும்புகிறார்கள். அது அவர்களுக்கு வெற்றியையும் கொடுத்திருக்கிறது. ஆனால் சில வகையான விக்கெட்டுகளில் ஒவ்வொரு பந்தையும் நீங்கள் தாக்க முற்படும்போது நிச்சயமாக தடுமாறுவீர்கள். இந்த அணுகு முறையில் நன்மைகள் தீமைகள் என இரண்டும் இருக்கின்றன. நீங்கள் ஆடுகளத்தின் தன்மையை மதிக்க வேண்டும்” என்று கூறினார்.

இது பற்றி தொடர்ந்து பேசிய அஸ்வின் தனது முன்னாள் பயிற்சியாளர் டபிள்யூ.வி ராமன் கூறிய அறிவுரை ஒன்றை மேற்கோள் காட்டினார்.” ஆடுகளத்தின் தன்மைக்கு சவால் விடாதீர்கள். நீச்சல் குளத்தில் நீந்துவது போல் உங்களால் கடற்கரையில் சென்று நீந்த முடியுமா? அதைப்போல ஆடுகளத்தை மதித்து நீங்கள் ஆடினால் ஆடுகளமும் உங்களை மதிக்கும். இதுதான் அந்த அறிவுரை எனக் கூறி முடித்தார் அஸ்வின். இங்கிலாந்து அணி அடுத்த வருடம் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி தொடர் இங்கிலாந்து அணியின் புதிய அணுகுமுறைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.