86-1 to 177-7 சரிந்த இந்திய அணி.. துருவ் ஜுரல் குல்தீப் யாதவ் போராட்டம்.. 4வது டெஸ்டில் இங்கிலாந்து முன்னிலை

0
373
Jurel

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 219 ரன்களை 7 விக்கெட் இழப்புக்கு எடுத்திருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி தற்பொழுது பெரிய நெருக்கடியில் இருக்கிறது.

நான்காவது போட்டி நடைபெறும் ராஞ்சி ஆடுகளம் மெதுவாக இருப்பதோடு நிறைய விரிசல்கள் கொண்டதாகவும் இருக்கிறது. விரிசல்களில் எதிர்பாராத விதமாக பந்து விழும்பொழுது, பந்து அந்த இடத்திலிருந்து மிகவும் தாழ்வாக உருண்டு செல்கிறது.

- Advertisement -

இதை எதிர்பார்க்காத பேட்ஸ்மேன்களால் பந்தை தடுத்து விளையாட முடியவில்லை. இங்கிலாந்து இன்னிங்சில் பென் ஸ்டோக்ஸ் பரிதாபமாக ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் இப்படி உருண்ட பந்தில் ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஜெய்ஸ்வால் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இப்படியான பந்துகளில் ஆட்டம் இழந்து இருக்கிறார்கள்.

இங்கிலாந்து அணி இன்று தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதற்கு அடுத்து களம் இறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 2, சுப்மன் கில் 38, ரஜத் பட்டி தார் 17, ரவீந்திர ஜடேஜா 12, சர்ப்ராஸ் கான் 14, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன் என வெளியேறினார்கள்.

ஒரு முனையில் சிறப்பாக நின்று விளையாடிய ஜெய்ஸ்வால் எதிர்பாராமல் தாழ்வாக வந்த பந்தில் போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார். அவர் 117 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 73 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

86 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று இருந்த இந்திய அணி அடுத்து, 177 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இந்த நிலையில் ஜோடி சேர்ந்த துருவ் ஜுரல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் சேர்ந்து 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, மேலும் ஆட்டம் இழக்காமல் இந்திய அணியை ஏழு விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் என்கின்ற இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ஜுரல் 30 ரன்னிலும், குல்தீப் யாதவ் 17 ரன்னிலும் களத்தில் இருக்கிறார்கள்.

நாளை இந்த ஜோடி விளையாடுவதை பொறுத்துதான் இந்திய அணிக்கு ஏற்பட இருக்கும் பின்னடைவு எவ்வளவு என்று தெரிய வரும். மேற்கொண்டு இந்த ஜோடி ஒரு 50 ரன்கள் சேர்க்காமல் இந்திய அணியால் இந்த போட்டிக்குள் இருக்க முடியாது.

இங்கிலாந்து தரப்பில் சுழற் பந்துவீச்சாளர்கள் சோயப் பஷீர் நான்கு, டாம் ஹார்ட்லி இரண்டு என மொத்தம் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள். இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை விட இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து சுழற் பந்துவீச்சாளர்களின் கண்ட்ரோல் மிகச் சிறப்பாக இருக்கிறது.