இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி போராடி இறுதியாக இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தோல்விக்கான காரணங்கள் கூறியிருக்கிறார்.
2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாற, மறுமுறையில் கேப்டன் ஜாஸ் பட்லர் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்களின் சீரற்ற ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. ஜாஸ் பட்லர் 30 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார்.
இதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கிய நிலையில் திலக் வர்மா ஒரு முனையில் நிலைத்து நின்ற விளையாட, மற்ற வீரர்கள் அனைவரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தனர். இருப்பினும் ஒரு கட்டத்தில் வெற்றி பெற வேண்டிய தருணத்தில் இருந்த இங்கிலாந்து அணிக்கு பந்து வீச்சு சரியாக அமையாத காரணத்தால் 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 72 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
தோல்விக்கான காரணம் குறித்து பட்லர்
தோல்விக்கான காரணம் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் கூறும் போது ” இது ஒரு சிறந்த போட்டி. இந்த வெற்றிக்கான அனைத்து பெருமைகளும் திலக் வர்மாவையே நிச்சயமாக சேரும். நாங்கள் வெற்றி பெறுவதற்கான நிறைய வாய்ப்புகளை உருவாக்கினோம் ஆக்ரோசமாக செயல்பட்டோம், போட்டியை இறுதிக்கட்டம் வரை எடுத்து வந்தோம். நாங்கள் பேட்டிங் செய்த விதம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. நாங்கள் விக்கெட்டுகளை இழந்தாலும் ஆக்ரோஷமாக விளையாடியதில் மகிழ்ச்சியாக உள்ளது.
இதையும் படிங்க:72 ரன்.. சூப்பர் ஸ்டாரான திலக் வர்மா.. பட்லர் போராட்டம் வீண்.. 2 விக்கெட்டில் இந்திய அணி த்ரில் வெற்றி.. இங்கி 2வது டி20
இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய பாணியில் மகிழ்ச்சியாகவே எனக்கு உணர்கிறது. நிறைய நேர்மறையான விஷயங்கள் இந்த போட்டியில் நடந்துள்ளது. ஜேமி ஸ்மித் இந்த போட்டியில் அருமையாக விளையாடினார். நாங்கள் எப்போதுமே முன்னேற முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மேலும் நாங்கள் விளையாடிய பாணியில் மகிழ்ச்சி அடைகிறோம். எனவே அடுத்த போட்டியில் இன்னும் தீவிரமாக செயல்படுவோம்” என்று பட்லர் கூறி முடித்திருக்கிறார். 72 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த இந்திய அணி வீரர் திலக் வர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.






