வெறும் 151.3 ஓவர்களில் இரண்டேகால் நாட்களில் தென்னாப்பிரிக்காவை சுருட்டி எறிந்த இங்கிலாந்து; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு!

0
226
England

கடந்த மாதத்திற்கு முன்பு தென் ஆப்பிரிக்க அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கட் தொடர்களில் விளையாட இங்கிலாந்து நாட்டிற்குச் சுற்றுப் பயணம் செய்திருந்தது. இந்த சுற்றுப்பயணம் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணிக்கு மிகவும் முக்கியமானது ஆகும். ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான ஓட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் இடத்தில் இருந்தது.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் 1-1 என்று சமனில் முடிவடைய, டி20 தொடரை 2-1 என தென்ஆப்பிரிக்க அணி கைப்பற்றியது. இதை அடுத்து இங்கிலாந்தில் 100 பந்து கிரிக்கெட் தொடர் நடந்ததால், தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக சிறிது நாட்கள் காத்திருந்தது.

- Advertisement -

இதற்கு நடுவில் இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியான முறையில் அணுகி வருகிறது. இந்த முறைக்கு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தற்போதைய பயிற்சியாளரான மெக்கல்லமின் செல்லப் பெயரான பாஸ் என்பதை வைத்து பாஸ்பால் என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆட்ட முறை குறித்து தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் மற்றும் நடுவரிசை வீரர் மார்க்ரம் ஆகியோர் விமர்சனத்துக்கு உரிய முறையில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இந்தநிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதற்கு மேல் இங்கிலாந்து அணி பாஸ்பால் முறையில் விளையாட முடியாது என்ற கருத்து உருவானது. டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அதிரடியான அணுகுமுறை சரி வராது என்ற பேச்சு எழுந்தது.

ஆனால் இதையடுத்து நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆக்ரோஷமாக திரும்பிவந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு பதிலடியை தந்தது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பழிக்குப்பழியாக தென் ஆப்பிரிக்க அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி தொடரை 1-1 சமன் செய்தது.

- Advertisement -

இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டி துவங்கிய நாளில் முழுவதுமாக மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவை அடுத்து போட்டி தள்ளிவைக்கப்பட்டது. அதற்கடுத்து 3வது நாளில்தான் போட்டி துவங்கியது, தென் ஆப்பிரிக்க அணி 118 மற்றும் 169 ரன்களை இரண்டு இன்னிங்சிலும் எடுத்தது. தென்ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்தின் ராபின்சன் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 158 ரன்கள் எடுத்தது. இதில் தென் ஆப்பிரிக்காவின் மார்க்கோ யான்சன் மிகச் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது இன்னிங்சில் 130 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி போட்டி தொடங்கிய இரண்டாவது நாளான நேற்று விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்தது. வெளிச்சம் சரிவர இல்லாத காரணத்தால் போட்டி நேற்று முடித்துக் கொள்ளப்பட்டது. இன்று போட்டி ஆரம்பித்த சிறிது நேரத்தில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து130 ரன்களை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது.

இங்கிலாந்தின் இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியின் வாய்ப்பு கொஞ்சம் பிரகாசமாகி உள்ளது. தற்போது முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணி 70%, தென் ஆப்பிரிக்க அணி 60%, இலங்கை அணி 53.33%, இந்திய அணி 52.08%, பாகிஸ்தான் அணி 51.85% என்ற அளவில் வெற்றி சதவீதத்தை பெற்றிருக்கிறார்கள். இந்திய அணிக்கு அடுத்து இருக்கும் டெஸ்ட் போட்டிகள் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்!