கடந்த இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணியின் செயல்பாடு மிக மோசமாக இருந்ததால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து வெள்ளை பந்து அணியின் சிறந்த வீரர் தற்பொழுது திடீரென ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் 2022 ஆம் ஆண்டு ஜோஸ் பட்லர் தலைமையில் டி20 உலக கோப்பை தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இதற்கு அடுத்த இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர்களில் இங்கிலாந்து அணி மிக மோசமான முறையில் விளையாடி வெளியேறியது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி
இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடர்கள் இரண்டிலும் டேவிட் மலான் மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ மற்றும் கிரீஸ் ஜோர்டான் போன்ற முன்னணி வீரர்களை கழட்டிவிட்டது. இதன் மூலம் இவர்கள் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது.
இந்த நிலையில் 36 வயதான டேவிட் மலான் இதை உணர்ந்து உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இவர் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் கடைசியாக இங்கிலாந்து அணிக்காக விளையாடியிருந்தார். அதற்குப் பிறகு இவருக்கு இங்கிலாந்து அணியில் வாய்ப்புகள் இல்லை.
மூன்று வடிவ சர்வதேச சதங்கள்
இங்கிலாந்து அணிக்காக 2017 ஆம் ஆண்டு அறிமுகமான டேவிட் மலான் 2023 ஆம் ஆண்டு வரையில் குறுகிய கிரிக்கெட் வாழ்க்கையையே கொண்டிருக்கிறார். இதில் 22 டெஸ்ட் போட்டிகள், 30 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 62 டி20 போட்டிகள் இங்கிலாந்து அணிக்காக விளையாடுகிறார். ஜோஸ் பட்ட்லருக்கு அடுத்து மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இங்கிலாந்து அணிக்கு சதம் அடித்த வீரராகவும் இருக்கிறார்.
தன்னுடைய ஓய்வு முடிவு குறித்து பேசி இருக்கும் டேவிட் மலான் “வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவத்தை பொருத்தவரையில் என்னுடைய எல்லா விதமான எதிர்பார்ப்புகளையும் நான் தாண்டி விட்டேன். டெஸ்ட் கிரிக்கெட் வடிவமே எனக்கு மிகவும் உச்சமான ஒன்றாக இருந்தது. சில நேரம் நன்றாக விளையாடினேன் சில நேரம் நன்றாக விளையாடவில்லை. இது எனக்கு மிகவும் ஏமாற்றமான ஒன்று. ஏனென்றால் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியதை விட சிறந்த வீரர் என்று எனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்.. ஒரே அடியாக 6 இடம் இறங்கிய பாபர் அசாம்.. ஆடாமலே கோலி முன்னேற்றம்
அதே சமயத்தில் டேவிட் மலான் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் 62 டி20 போட்டிகளில் 36 ஆவரேஜில் 1892 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 1 சதம் மற்றும் 16 அரை சதங்கள் அடக்கம். மேலும் இவர் இங்கிலாந்து அணிக்காக டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது!