இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பேட்டிங்கில் துருவ் ஜுரல் மற்றும் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் உயர்த்தி இருக்கிறார்கள்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுத்தது. 177 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய நிலையில், அங்கிருந்து இந்திய அணியை 307 ரன்கள் வரையில் துருவ் ஜுரல் அழைத்து வந்தார். இன்று அவர் 90 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தை தவறவிட்டார்.
இதற்கு அடுத்து இங்கிலாந்து அணி 46 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து அதிரடியாக விளையாட துவங்கியது. இதன் மூலம் கிடைக்கும் ரன்கள் கொண்டு நான்காவது இன்னிங்ஸில் இந்திய அணியை எளிதாக மடக்கலாம் என்பது அவர்களுடைய திட்டமாக இருந்தது. அதிரடியாக ஆரம்பித்தார்கள்.
இந்த முறை பந்துவீச்சுக்கு நேரடியாக அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரையும் ரோகித் சர்மா கொண்டு வந்தார். இதற்கு கைமேல் பலனாக அஸ்வின் பென் டக்கெட், போப் மற்றும் ஜோ ரூட் என முக்கிய மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தை உருவாக்கினார்.
இதற்கு அடுத்து அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்த ஜாக் கிரவுலியை குல்தீப் யாதவ் 60 ரன்கள் கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். இதைத்தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோ மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இணைந்து விளையாடினார்கள்.
இந்த ஜோடியையும் மீண்டும் வந்த குல்தீப் யாதவ் பிரித்தார். அவரை கிளீன் போல்ட் செய்து நான்கு ரன்களில் வெளியேற்றினார். தற்போது தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 120 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருக்கிறது.
இதையும் படிங்க : டிஆர்எஸ் ஏமாத்தறாங்க.. அவுட்டே கிடையாது.. ஜோ ரூட் ஏமாற்றம்.. மெக்கலம் குரூப் அதிருப்தி
தற்பொழுது கடைசி பேட்டிங் கூட்டணி களத்தில் இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிருந்து இங்கிலாந்து அணியை விட்டது போல் விடாமல், 200 ரன்களுக்குள் சுருட்டினால், இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு மிகவும் அதிகரிக்கும். தற்பொழுது இந்திய அணியை இந்த போட்டிக்குள் துருவ் ஜுரல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் கூட்டி வந்திருக்கிறார்கள். மேற்கொண்டு இந்த போட்டியை இந்தியாவின் பக்கம் யார் முடித்து வைக்கிறார்கள்? என்று பார்க்க வேண்டும்.