ENG vs NZ.. 10.4 ஓவர்களில் 132 ரன்.. பேர்ஸ்டோ புரூக் காட்டடி.. இங்கிலாந்து 95 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி!

0
1947
Brook

நியூசிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு முன்பாக நான்கு டி20 மற்றும் நான்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது!

நியூசிலாந்து அணியின் இந்தச் சுற்றுப்பயணத்தில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், இங்கிலாந்து டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் வில் ஜேக்ஸ் 11 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த டேவிட் மலான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்படாத ஹாரி புரூக் ஜானி பேர்ஸ்டோ உடன் ஜோடி சேர்ந்தார். இதன்பிறகு ஆட்டத்தில் அனல் பறக்க ஆரம்பித்தது.

நியூசிலாந்து பந்துவீச்சை நொறுக்கி தள்ளிய இந்த ஜோடியில் இரண்டு பேரும் அரைசதம் அடித்து அசத்தினார்கள். ஹாரி புரூக் 36 பந்தில் 5 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் என 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 10.4 ஓவர்களில் 131 ரன்கள் குவித்து அசத்தியது.

இதற்கடுத்து வந்த மொயின் அலி இரண்டு பந்துகளில் ஆறு ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 8 பந்தில் 13 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். இறுதி வரை ஆட்டம் இழக்காத ஜானி பேர்ஸ்டோ 60 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 86 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 198 ரன் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி நான்கு ஓவர் பந்து வீசி 44 ரன்கள் விட்டுத் தந்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பின் ஆலன் 3, டெவோன் கான்வே 2 என சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து களம் வந்த டிம் செப்பர்ட் 38, கிளன் பிலிப்ஸ் 22, மார்க் சாப்மேன் 15 இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுத்தார்கள்.

இதற்குப் பிறகு களம் கண்ட டேரில் மிட்சல் 0, மிட்சல் சான்ட்னர் 8, ஆடம் மில்னே 2, டிம் சவுதி 8, லாக்கி பெர்குஷன் 0, இஷ் சோதி 0* என யாரும் இரட்டை இலக்கத்தைத் தொடவே இல்லை. இதனால் நியூசிலாந்து அணி 13.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, இந்தப் போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் தொடர் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் அறிமுகமாகிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கஸ் அட்கிஸ்டன் 2.5 ஓவர் பந்துவீசி 20 ரன்கள் விட்டுத்தந்து நான்கு விக்கெட் வீழ்த்தினார்.