ஆசியகோப்பை பாதியில் வெளியேறிய ஜடேஜாவுக்கு டி20 உலககோப்பையில் இடம் கிடைக்குமா? – ராகுல் டிராவிட் பதில்!

0
87

டி20 உலக கோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜா இடம்பெறுவாரா? என்ற கேள்விக்கு ராகுல் டிராவிட் பதில் கொடுத்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகி இருக்கிறார். இந்திய டி20 அணியின் முக்கியமான ஆல்ரவுண்டர்களுள் ஒருவராக இருந்து வரும் ரவீந்திர ஜடேஜா முக்கியமான தொடரில் இருந்து இப்படி விலகி இருப்பது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை தந்திருக்கிறது. ஆனால் இவருக்கு மாற்று வீரராக அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டு இருக்கிறார். எஞ்சியிருக்கும் ஆசியகோப்பை தொடரின் போட்டிகளில் அக்சர் பட்டேல் விளையாடுவார் என்று பிசிசிஐ தரப்பு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

- Advertisement -

ரவீந்திர ஜடேஜாவின் காயம் எந்த அளவிற்கு தீவிரமாக இருக்கிறது? எத்தனை நாட்கள் இன்னும் அவருக்கு ஓய்வு தேவை? என்பது பற்றி முழு பரிசோதனை நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் இறுதியில் டி20 உலக கோப்பை தொடர் துவங்க இருக்கிறது. அதற்குள் அவர் குணமடைந்து விடுவாரா? அல்லது டி20 உலக கோப்பை தொடரில் விளையாட மாட்டாரா? என்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஜடேஜாவிற்கு கணுக்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் அவரால் இன்னும் இரண்டுமாத காலத்திற்கு எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் விளையாட இயலாது. டி20 உலக கோப்பை தொடரிலும் அவர் இருக்க மாட்டார் என்று மேலும் சில தரப்பிலிருந்து தகவல்கள் வெளி வருகின்றன.

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. இப்போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் டிராவிட், ஜடேஜா போன்ற வீரர் டி20 உலக கோப்பை தொடருக்கு எவ்வளவு முக்கியம்? அவர் இந்திய அணியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார், மேலும் டி20 உலக கோப்பை தொடரில் அவரால் விளையாட முடியுமா? என்ற பலரது கேள்விகளுக்கும் பதில் அளித்திருக்கிறார்.

“ஜடேஜாவின் கணுக்காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக அவர் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். மருத்துவ குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை கொடுத்து அவரை அவ்வபோது பரிசோதித்து வருகின்றனர். உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் சற்று அதிகமான நாட்கள் இருக்கின்றன. அதற்குள் நாம் எந்தவித முடிவுக்கும் வந்து விடக்கூடாது. அவர் வெளியேற்றப்படுவாரா? அல்லது அணியில் இருப்பாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் கவனிக்க வேண்டும்.”

- Advertisement -

“விளையாட்டு வீரர்களுக்கு காயம் ஏற்படுவது விளையாட்டில் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது. அதற்காகத்தான் ஒவ்வொரு அணியிலும் மருத்துவ குழு மற்றும் நிபுணர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு வீரரின் காயமும் குணமடையும் தன்மை வேறுபடும். அதை பொருத்து அவர்களுக்கு எத்தனை நாட்கள் தேவை? அடுத்தடுத்த தொடர்களில் இருப்பார்களா? என்பது குறித்து தகவல்கள் தெரிவிக்க முடியும்.”

“மருத்துவ அறிக்கை வருவதற்கு முன்பாகவே ஜடேஜா மீது நிறைய கருத்துக்களை முன்வைப்பது சரியானதாக இருக்காது. உலகக் கோப்பை குறித்து இவ்வளவு முன்னதாகவே முடிவு எடுப்பதும் தவறு. எங்களிடம் சில திட்டங்கள் இருக்கின்றன. இன்னும் உலக கோப்பைக்கு ஆறு முதல் ஏழு வாரங்கள் இருக்கின்றன. அதற்குள் நிலமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்பதால் பொறுத்திருந்துதான் நாம் கவனிக்க வேண்டும் என்றார்.

ஆசியகோப்பை தொடரில் ஜடேஜாவின் இடத்திற்கு அவரைப் போன்ற இடதுகை சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் உள்ளே எடுத்துவரப்பட்டார். இது சரியான முடிவாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆசிய கோப்பை தொடரில் இரண்டாவது முறையாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது சூப்பர் ஃபோர் சுற்றில் போட்டி நடைபெற இருப்பதால், இந்திய அணிக்கு மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இது இருக்கிறது. டி20 உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதற்காக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே தங்களது வீரர்களை அறிவித்து விட்டனர். ஆசிய கோப்பை தொடர் முடிவுற்ற பிறகு, பிசிசிஐ இந்திய வீரர்களின் பட்டியலையும் வெளியிடும் என்று பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல்கள் வருகின்றன.