இந்திய கிரிக்கெட் தற்போது வெகு வேகமாக புதிய வீரர்களை உள்வாங்க ஆரம்பித்திருக்கிறது. மேலும் புதிய அணி கலாச்சாரமும் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் தற்போது இந்திய அணிக்குள் அனுபவ வீரர்களை விட மிக அதிகமாக இளம் வீரர்களே இடம் பிடித்து வருகிறார்கள். பவுலிங் மற்றும் பேட்டிங் யூனிட்டிலும் இதே சரிசமமான நிலையே காணப்படுகிறது.
ஆனாலும் எப்பொழுதும் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஒரு தோனி, ஒரு யுவராஜ் சிங் குறித்த எதிர்பார்ப்புதான் இருந்து வருகிறது. அவர்கள் இருவரும் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் உண்டாக்கிய தாக்கம் அப்படி இருக்கிறது.
அவர்களின் ஓய்வுக்குப் பிறகு, அவர்கள் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் என்ன செய்தார்களோ, அதையே திருப்பி அதே மாடலில் செய்யக்கூடிய வீரர்கள்தான் தேடப்பட்டு வருகிறார்கள். அடுத்த தோனி அடுத்த யுவராஜ் சிங் யாராக இருப்பார்கள்? என்கின்ற கேள்வி இந்திய கிரிக்கெட்டில் நிறைய இருக்கிறது.
இது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “நான் ரிங்கு சிங்குவை இடது கை தோனி என்றுதான் அழைப்பேன். தோனி மிகப் பெரியவர் அவருடன் ஒப்பிட முடியாது என்றாலும், ஆனால் கொண்டு வரும் அமைதியை ஒப்பிட்டு நான் சொல்கிறேன். அவர் உத்தரப்பிரதேச அணிக்காக எக்கச்சக்க ரன்கள் குவித்து இந்திய அணிக்கு வந்திருக்கிறார்.
நான் சிவம் துபேவை யுவராஜ் சிங்கின் எளிய வடிவம் என்று சொல்லுவேன். யுவராஜ் சிங்கிடம் இருக்கும் பேட் ஸ்விங், உயரம் மற்றும் பந்தைய அடிப்பதற்கு உயரத்தால் கிடைக்கும் ரீச், இவையெல்லாம் சிவம் துபேவிடமும் இருக்கிறது.
நாம் ஆண்டுகளை கிறிஸ்து பிறப்பதற்கு முன் கிறிஸ்து பிறப்பதற்கு முன் என்று பிரிப்பது போல, சிவம் துபே கிரிக்கெட் வாழ்க்கையை சிஎஸ்கேவுக்கு முன் சிஎஸ்கேவுக்கு பின் என்று பிரிக்கலாம்.
பொதுவாக டி20 உலகக்கோப்பை நடக்கும் வெஸ்ட் இண்டிஸ் சூழ்நிலைகள் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் மைதானத்தின் சூழ்நிலையை ஒத்துதான் இருக்கும். மேலும் அவர் சுழல் பந்துவீச்சை தாக்கி அடிக்கும் ஒரு அசுரன்” என்று கூறியிருக்கிறார்.