“கவலைப்படாதிங்க.. நீங்க எதிர்பார்க்கிறத நான் செய்வேன்.. என் பலம் இதுதான்!” – சுப்மன் கில் நம்பிக்கை பேச்சு!

0
878
Gill

இந்திய அணியில் முக்கிய வீரர்கள் இடம் பெற்றிருக்காத நிலையில், நேற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி அபாரமாகச் செயல்பட்டு வெற்றி பெற்று இருக்கிறது.

இந்தப் போட்டியில் பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது என்பது உண்மை. குறிப்பாக முகமது சமி அசத்தினார்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் இளம் வீரர்கள் சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் இருவரும் பேட்டிங் செய்த விதம் அற்புதமான ஒன்றாக இருந்தது. அவர்களுடைய ஒவ்வொரு ஷாட்களும் நேர்த்தியின் உச்சத்தில் இருந்தன.

நேற்றைய போட்டியில் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது. ருதுராஜ் 77 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்தப் போட்டிகள் எடுத்ததும் அதிரடியில் ஈடுபட்டு ஆஸ்திரேலியாவை அடக்கியது கில்தான். அவர் 63 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 74 ரன்கள் எடுத்தார்.

இந்த வருடம் முழுவதுமே அவருக்கு மிகச் சிறப்பான ஒன்றாக அமைந்து வருகிறது. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தையும் அடித்தார். அடுத்து ஐபிஎல் தொடரையும் விட்டு வைக்காமல் அதிலும் மூன்று சதங்கள் அடித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்றைய போட்டிக்கு பின் பேசிய சுப்மன் கில் “நாங்கள் முதல் முறையாக மொஹாலிக்கு வந்த பொழுது எனக்கு ஏழு வயது. இங்கு ஒரு பார்வையாளராக பல போட்டிகளை பார்த்ததால், இந்த மைதானத்தில் ஒரு சர்வதேச போட்டியை விளையாடுவது எனக்கு கனவாக இருந்தது. நான் இந்த மைதானத்தில் ஒன்று, இரண்டு ஐபிஎல் போட்டிகள் விளையாடியிருக்கிறேன். ஆனால் என் குடும்பத்தினர் பார்க்க சர்வதேச போட்டி விளையாடுவது சிறப்பானது.

ருதுராஜ் மற்றும் இசான் கிசான் இருவரும் தங்களுக்கான வாய்ப்புகளைப் பெற்று இருக்கிறார்கள். இவர்கள் எப்பொழுதும் சிறப்பாக செயல்பட ஆர்வமாக இருக்கிறார்கள். அதனால் வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதை வெளிப்படுத்துகிறார்கள்.

எப்போது தாக்க வேண்டும்? எப்போது தற்காக்க வேண்டும்? என்று நான் உணர்ந்திருப்பதுதான் என்னுடைய பலம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்னிடம் எதிர்பார்க்கக் கூடியதை, எதிரணி மற்றும் சூழ்நிலைகளுக்கு தகுந்த மாதிரி மாறிக்கொண்டு உலக கோப்பையில் சிறப்பாக செய்வேன்!” என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்!