ராஜஸ்தான் இந்த வருஷம் கோப்பையை ஜெயிச்சாலும், சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க மாட்டாங்க – முன்னாள் இந்திய வீரர் கருத்து!

0
722

சஞ்சு சாம்சன் இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தாலும், பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டாலும் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் தான் என்று பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் சரந்தீப் சிங்.

சஞ்சு சாம்சன் 2015ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகினார். ஆனால் இதுவரை 17 டி20 போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார். 2021ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 11 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ளார்.

- Advertisement -

கிடைக்கும் வாய்ப்புகளில் நன்றாக செயல்பட்டாலும், சர்வதேச அணியில் தொடர்ந்து சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைப்பது சிக்கலாகவே இருக்கிறது. கடைசி மூன்று தொடர்களிலும் இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

இதற்கிடையில் ஐபிஎல் போட்டிகளில் கடந்த சில வருடங்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பிலும் இருந்து வருகிறார். கடந்த 6 சீசன்களாக தொடர்ச்சியாக 350 ரன்களுக்கு மேல் அடித்து வருகிறார்.

கேப்டன் பொறுப்பிலும் அசத்தி வரும் சஞ்சு சாம்சன், கடந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணியை இறுதிப்போட்டி வரை எடுத்துச்சென்றார். அந்த சீசனில் 458 ரன்கள் அடித்திருந்தார். இந்த சீசனில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 160 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும்.

- Advertisement -

இப்படி பேட்டிங்கில் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் இவரை இந்திய அணியில் ஏன் எடுப்பதில்லை? இனியும் இவருக்கு வாய்ப்புகள் கிடைப்பது கடினமா? என்று முன்னாள் தேர்வுக்குழு அதிகாரி மற்றும் முன்னாள் இந்திய வீரர் சரந்தீப் சிங் பேட்டி அளித்துள்ளார். அவர் பேசியதாவது:

“சஞ்சு சாம்சன் பேட்டிங் திறமையை அறிந்து 2015ஆம் ஆண்டு நான் தேர்வுக்குழு அதிகாரியாக இருந்தபோது இவரை டி20 அணியில் எடுத்தேன். ஆனால் எங்களது எதிர்பார்ப்பிற்கு இவர் செயல்படவில்லை. ஒருநாள் போட்டிகளிலும் இவரை எடுப்பதற்கான சாத்திய கூறுகளும் இல்லாமல் போனது. அப்போது துவக்க வீரராக இருந்தார். இப்போது மிடில் ஆர்டரில் விளையாடி வருகிறார். நன்றாகவும் செயல்படுகிறார்.

ஆனால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக இருப்பதால் ஏற்கனவே அணியில் ரிஷப் பன்ட் இருக்கிறார். இஷான் கிஷன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் நன்றாக பினிஷிங் செய்து இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்ற தினேஷ் கார்த்திக் சிறப்பாக கீப்பிங் செய்யக்கூடியவர். இவர்களில் யாரை தூக்கி விட்டு சஞ்சு சாம்சனை எடுத்திருப்பாகிர்கள்.

மேலும் ஐபிஎல் கோப்பை என்பது இந்திய அணியில் எடுப்பதற்கான தகுதி அல்ல. ஐபிஎல் கோப்பை முக்கியம் என்றாலும், தனிப்பட்ட ஆட்டத்தினால் மட்டுமே இந்திய அணியில் எடுக்க முடியும். அசாத்தியமாக 700-800 ரன்கள் அடித்தால் மட்டுமே இந்திய அணியின் கதவை தட்ட முடியும். அடுத்தடுத்த தொடர்களில் இடம் பெற முடியும் செயல்பாடு மட்டுமே இந்திய அணியில் எடுப்பதற்கான வரைமுறையாக இருந்து வருகிறது.

ஏற்கனவே அணியில் இருக்கும் வீரர்களை விட சஞ்சு சாம்சன் செயல்பாடு தாக்கம் நிறைந்ததாக இருக்கவேண்டும் அல்லவா? அதைப்பொறுத்து சஞ்சு சாம்சன் ஆடவேண்டும் என்றார்.