முட்டாள்தனமாகப் பேசவேண்டாம் ; விராட் கோலி இந்த வேலைக்கு சரிப்பட்டு வர மாட்டார் ; கவுதம் காம்பீர்!

0
229
Gambhir

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் என்பது விராட் கோலியை அச்சாணியாகக் கொண்டு சக்கரம் போல்தான் சுற்றி வந்தது. இடையில் ஒரு மூன்று ஆண்டுகள் அவரிடம் இருந்து சதங்கள் வராமல் போக, அவர் கொஞ்சம் பேட்டிங்கில் தடுமாற இந்திய அணிக்குள் காட்சிகள் நிறைய மாற ஆரம்பித்தன.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் மிகவும் பாதிப்பிற்கு உள்ளானது. இதையடுத்து அவருக்கு ஒரு சிறு ஓய்வு அளிக்கப்பட்டு இங்கிலாந்து அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு ஆறு இன்னிங்சில் அவரால் ஒரு அரைசதத்தை கூட கொண்டுவர முடியவில்லை.

- Advertisement -

இதையடுத்து அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. ஒரு மாத காலம் ஓய்வில் இருந்தவர், சமீபத்தில் முடிந்த ஆசிய கோப்பைக்கு அணைக்குள் திரும்பினார். அவர் இந்த முறை மீண்டும் வந்துவிடுவார் என எல்லோருமே நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் முதல் போட்டியில் கொஞ்சம் தடுமாறினாலும் 30 ரன்களுக்கு மேல் கொண்டு வந்தார். அடுத்து ஹாங்காங் அணியுடன் ஒரு அரை சதம் அடித்தார். மீண்டும் சூப்பர் ஃபோர் சுற்றில் பாகிஸ்தான் அணியுடன் ஒரு அரை சதம் அடித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக ஆப்கானித்தான் அணியுடன் ரோகித் சர்மா ஓய்வெடுக்க, கேஎல் ராகுல் உடன் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோலி, கொஞ்சமும் பிசிறு இல்லாமல் பழைய விராட்கோலியாக திரும்ப வந்தார். 61 பந்துகளில் 122 ரன்களை 6 பவுண்டரி 6 சிக்ஸர் என கொண்டு வந்து அசத்தினார். மூன்று வருடங்களுக்குப் பிறகு சதம் அவருக்கு வந்தது. மேலும் டி20 போட்டியில் அவருக்கு முதல் சதம் வந்தது.

விராட் கோலி துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி இந்த சதத்தை அடித்த பிறகு, உலகக்கோப்பையில் அவரை துவக்க வீரராக களம் இறக்குவது பற்றி வெளியில் பேச்சுகள் அதிகரிக்க ஆரம்பித்தன. விராட் கோலி சில நேரங்களில் இந்திய அணிக்கும், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கும் துவக்க வீரராக விளையாடியிருக்கிறார். இதனால் இந்தப் பேச்சுகள் வலிமை அடைந்தது.

- Advertisement -

தற்போது இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கூறும்பொழுது ” அவர் ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி உடன் துவக்க வீரராக தொடங்கினார் என்று, அதையே உலகக்கோப்பையில் தொடர வேண்டும் என்று முட்டாள்தனமாக பேச வேண்டாம். அவரால் கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மாவுடன் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்க முடியாது. இதைப் பற்றிய விவாதங்களே முதலில் நடக்கக்கூடாது. நான் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கூட முன்பே இதைக் கூறி இருந்தேன். நான் எப்போதும் பேட்டிங்கில் நம்பர் மூன்றாம் இடத்தில் நெகிழ்வாக இருப்பேன். துவக்க ஜோடி 10 ஓவர்களுக்கு மேல் விளையாடினால் அந்த இடத்தில் சூரிய குமாரை ஆட வைப்பேன்; துவக்க ஜோடி சீக்கிரத்தில் ஆட்டமிழந்தால் விராட் கோலியை ஆட வைப்பேன்” என்று கூறினார்.

இவரது கருத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரபல துவக்க வீரர் மேத்யூ ஹைடன் ஆமோதித்தார். தான் விராட் கோலி பேட்டிங்கில் நம்பர் மூன்றாமிடத்தில் இறங்குவதை விரும்புவதாகவும், அந்த இடத்தில் இறங்கி இன்னிங்சை அவரால் கட்டுக்குள் கொண்டுவந்து தொடர முடியும் என்றும், அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்!