ஐபிஎல் விளையாடாதீங்க! – கபில்தேவ் காட்டமான கருத்து!

0
783

தற்காலத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் ஐபிஎல் போன்ற உரிமையாளர் டி20 கிரிக்கெட் லீக் தொடர்களும் இருக்கிறது. இதெல்லாம் வீரர்களை உடல் சோர்வு அடைய வைப்பது மட்டுமல்லாமல் மன சோர்வையும் அடைய வைக்கிறது.

கிரிக்கெட் உலகில் சில காலமாக மனச்சோர்வு மன அழுத்தம் என்கின்ற வார்த்தைகள் அதிக அளவில் உச்சரிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல், தொடர்ச்சியான போட்டிகளால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறேன் எனக்கு ஓய்வு வேண்டும் என்று கேட்டு வாங்கி ஓய்வில் இருந்து வந்தார்.

அடுத்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் இதேபோல் மன அழுத்தம் அதிகம் இருப்பதாக கூறி காலவரையற்ற ஓய்வுக்கு சென்று மீண்டும் திரும்பி வந்தார். இப்படியான சூழ்நிலைகளில் போது வீரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும், மேலும் அவர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்ற குரல்கள் எதிரொலிக்க ஆரம்பித்தன.

இதற்கு முதல் செயல்முறைத் திட்டத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிமுகப்படுத்தியது. எவ்வளவு பெரிய முக்கியமான ஆட்டங்களாக இருந்தாலும் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவது என்ற திட்டத்தை வகுத்து அதன்படி வீரர்களின் பணிச்சுமையை குறைத்தார்கள். இங்கிலாந்தின் இந்த செயல்முறை மற்ற கிரிக்கெட் வாரியங்களும் பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறது.

தற்போது இந்திய அணியில் கூட சில முக்கியமான தொடர்களுக்கு மட்டும் நட்சத்திர வீரர்களை தொடர்ந்து பயன்படுத்தி, சில தொடர்களுக்கு புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.

தற்போது கிரிக்கெட் உலகில் அதிக அளவில் உச்சரிக்கப்பட்டு வரும் மனச்சோர்வு மன அழுத்தம் குறித்து, தான் விளையாடிய காலங்களில் எந்த ஓய்வும் எடுக்காமல் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் முதல் உலகக் கோப்பை வெற்றி கேப்டன் கபில்தேவ் இடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கபில்தேவ்
” எனக்கு கிரிக்கெட் விளையாடுவது என்பது பெரிய மகிழ்ச்சியான விஷயம். இதுதான் இங்கு வித்தியாசத்தை உருவாக்குகிறது. நான் இந்த விஷயத்தை கொஞ்சம் மாற்றி உங்களுக்கு கூறுகிறேன். சமீப காலத்தில் கிரிக்கெட் உலகில் ஐபிஎல் விளையாடுகிறோம் அதனால் மனச்சோர்வு மன அழுத்தம் என்று பேசுகிறார்கள். இதற்கு நான் ஒன்றை தான் கூறுவேன், நீங்கள் ஐபிஎல் விளையாடாதீர்கள். நீங்கள் கிரிக்கெட்டை விரும்பி உள்ளே வந்தால் அழுத்தம் என்று எதையும் உணரக் கூடாது ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” மன அழுத்தம் மனச்சோர்வு என்று ஏதோ இந்த அமெரிக்க வார்த்தைகள் வந்துள்ளன. எனக்கு இது என்னவென்று புரியவில்லை. நான் ஒரு விவசாயி. நான் அங்கிருந்துதான் வந்தேன். நாங்கள் மகிழ்ச்சியாக மகிழ்ச்சிக்காக கிரிக்கெட் விளையாடினோம். மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் அழுத்தம் இருக்காது ” என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார்!