“நாங்க தோக்க கிடையாது.. டெஸ்ட் பண்ணிதான் பார்த்தோம்.. உலக கோப்பைல பாருங்க” – ஜடேஜா சவால் பேச்சு!

0
296
Jadeja

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஒன்றுக்கு ஒன்று என தற்பொழுது சமநிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் தொடரின் கடைசி போட்டி இன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்க இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெல்லாவிட்டால் அது மிகப் பெரிய விமர்சனத்தை உருவாக்கும் வேளையில், ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதி சுற்றில் தோற்று வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகப்பெரிய உந்துதலாக அமையும்.

- Advertisement -

வீரர்களை பரிசோதிக்க வேண்டிய கட்டாயம் இருந்தும் முதல் போட்டியில் டாஸ் வென்று கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த தவறின் காரணமாக இரண்டாவது ஆட்டத்தில் தன்னையும், விராட் கோலியையும் அணியில் இணைத்துக் கொள்ளாமல் வெளியில் வைத்துக் கொண்டார். இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி படு சுமாராக விளையாடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இப்படி ஒரு தவறு அடுத்த தவறுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. இப்படியான நிலையில் இரண்டாவது போட்டி போலவே இந்த போட்டியிலும் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி வெளியில் இருப்பார்களா? இல்லை இதை சரி செய்கிறேன் என்று அவர்கள் உள்ளே வந்து, சஞ்சு சாம்சன் அக்சர் படேல் ஆகியோருக்கு ஒரு வாய்ப்போடு நிறுத்துவார்களா? என்ற குழப்ப நிலை நீடிக்கிறது.

தற்பொழுது மூன்றாவது போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் நிலை குறித்து பேசி உள்ள ரவீந்திர ஜடேஜா
” ஆசியக் கோப்பை மற்றும் உலக கோப்பைக்கு முன்பாக நாங்கள் சரியான அணியை கண்டறிய பரிசோதனைகளை செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் ஒருமுறை ஆசியக்கோப்பை மற்றும் உலகக்கோப்பைக்கு சென்று விட்டால் அங்கு எங்களால் இப்படியான பரிசோதனைகளை செய்ய முடியாது. நாங்கள் தற்பொழுது சமமான பலம் கொண்ட அணியை கண்டறியும் முயற்சியில் இருக்கிறோம்.

- Advertisement -

கேப்டன் மற்றும் பயிற்சியாளர், அணி நிர்வாகத்திற்கு எப்படியான வீரர்களுடன் களமிறங்க வேண்டும் என்று மிக நன்றாகவே தெரியும். இதில் எந்த குழப்பமும் கிடையாது. நாங்கள் அந்த போட்டியில் தோற்கவில்லை காரணம் நாங்கள் அந்த போட்டியில் பரிசோதனை முயற்சிகள்தான் செய்தோம். சில நேரங்களில் சூழ்நிலைகளும் காரணம் ஆகின்றன. ஒரே ஒரு தோல்வி குழப்பத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கி விடாது. நாங்கள் ஏற்கனவே ஆசியக் கோப்பைக்கு எப்படியான அணி உடன் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டோம்.

நாங்கள் அந்த போட்டியின் தோல்வியால் எந்தவித ஏமாற்றமும் அடையவில்லை. நாங்கள் வெவ்வேறு கலவையான அணியை கொண்டு விளையாடத்தான் முயற்சி செய்து பார்த்தோம். அதேபோல் வேறு வேறு பேட்ஸ்மேன்களை வேறு வேறு இடங்களில் இறக்கியும் பரிசோதனை செய்தோம். இதன் காரணமாக இந்த தோல்வி எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது. நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். அடுத்த போட்டிகள் நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை தருவோம்!” என்று கூறி இருக்கிறார்!