“வெளியில் இருந்து எழும் குரல்களுக்கு செவி சாய்க்க வேண்டாம்” – இந்திய துவக்க வீரருக்கு அறிவுரை வழங்கிய அமீத் மிஸ்ரா !

0
141

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரிலும் மூன்று ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரிலும் விளையாட இருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது .

இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற ஒன்றாம் தேதி இந்தூரில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் வெற்றி பெறும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிகளுக்கு எளிதாக தகுதி பெற்று விடும். மேலும் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரையும் தொடர்ச்சியாக மூன்றாவது முறை வென்று விடும்.

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை பந்து வீச்சு வலுவாக இருக்கிறது. முகமது சமி ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பான முறையில் பந்து வீசி வருகின்றனர். பேட்டிங்கை பொறுத்த வரை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் நடந்து முடிந்த போட்டிகளில் சிறப்பாக ஆடி இருக்கின்றனர். விராட் கோலி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் துரதிஷ்டவசமாக நடுவரின் தவறான தீர்ப்பால் ஆட்டம் இழந்தார்.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரும் முன்னாள் துணை கேப்டனுமான கே எல் ராகுல் தற்போது மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். கடந்த வருடத்திலிருந்து டெஸ்ட் போட்டிகளில் மிகவும் மோசமாக ஆடி வருகிறார் கே எல் ராகுல். இறுதியாக அவர் ஆடிய 10 இன்னிங்ஸ்களில் 23 ரன்களை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அவரை நீக்கிவிட்டு சுப்மன் கில் துவக்க வீரராக அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுவடைந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளரான அமித் மிஸ்ரா இந்திய அணியின் துவக்க வீரர் கே எல் ராகுலுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக பேசி இருக்கும் அவர் “கே எல் ராகுல் ஒரு மிகச் சிறந்த வீரர். அவர் கடினமாக உழைக்கும் ஒரு வீரர் என்பதை நான் நன்கு அறிவேன். அவர் ஒரு போட்டிக்கு முன்பாக எவ்வளவு கடுமையாக பயிற்சி செய்வார் என்பதை நான் கண்டிருக்கிறேன். வெளியே யார் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய ஆட்டத்தில் கவனத்தை செலுத்தி அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நிறைய ரன்களை குவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் “எல்லா வீரருக்கும் இது போன்ற சரிவுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்படும். அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள் அதே போல கே எல் ராகுலும் தன்னுடைய சரிவிலிருந்து மீண்டு விரைவாகவே ரன் குவிப்பை தொடங்குவார் என தெரிவித்தார். அதற்கான திறமையும் விடாமுயற்சியும் அவரிடம் இருக்கிறது என்று கூறினார் மிஸ்ரா. இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான ஆகாஷ் சோப்ராவும் கே எல் ராகுலுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.