“இவர் மேல கை வைக்காதிங்க.. கடைசில உங்களுக்கு அது நஷ்டமா முடியும்..!” – டிராவிட்டுக்கு எச்சரிக்கை கொடுக்கும் இந்திய முன்னாள் வீரர்!

0
456
ICT

இந்திய அணி தற்போது கேஎல்.ராகுல் தலைமையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை விளையாடுகிறது.

இந்தத் தொடரில் முதலில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று இந்தூர் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெறுகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்பும் முன்பாகவே தொடரை கைப்பற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்று இருந்த போதிலும், எட்டாவது இடத்திற்கான வீரர் என்று பார்க்கப்படுகின்ற வேகப்பந்துவீச்சாளர் சர்துல் தாக்கூர் வழக்கம் போல் ரன்களை கொடுத்தார்.

அதே சமயத்தில் தற்பொழுது இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு இல்லாத வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக எட்டாவது இடத்தில் யார் இருக்க வேண்டும்? என்கின்ற பெரிய விவாதம் சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து மிக முக்கியமான ஒரு பார்வையை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளிப்படுத்தி, தனது கருத்தை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“தற்பொழுது இரண்டாவது போட்டிக்கு பந்துவீச்சில் ஒரு குழப்பம் ஏற்படலாம் என்று நினைக்கிறேன். பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சிராஜ் விளையாடலாம். சர்துல் தாக்கூர் இன்றும் விளையாடக் கூடும் என்று நினைக்கிறேன்.

உண்மையில் அவர் விளையாட வேண்டும். உங்களுடைய உலகக்கோப்பை அணியில் சர்துல் தாக்கூர் இருந்தால், அவரை நீங்கள் தொடக்கூடாது. அவரைத் தொடர்ந்து விளையாட விடவேண்டும். நான் இதைத்தான் உணர்கிறேன். முகமது சமிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்.

பேட்டிங்கை பொறுத்தவரை பல மாற்றங்களுக்கு இந்திய அணி செல்வதற்கு வாய்ப்புகள் கிடையாது. கேஎல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் இருப்பார்கள். திலக் வர்மா வேண்டுமென்றால், இஷான் கிஷான் மேலே செல்ல வேண்டும். இதற்காக ருதுராஜ் நீக்கப்படுவார் என்று நான் நினைக்கவில்லை.

ரவீந்திர ஜடேஜாவிடம் இருந்து இந்திய அணிக்கு கொஞ்சம் நிறைய விக்கெட் தேவைப்படும். இந்தூர் ஆடுகளத்தில் விக்கெட் எடுப்பது எளிதான காரியம் கிடையாது. ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. அவர் தொடர்ந்து பரிசோதிக்கப்படுவார்!” என்று கூறியிருக்கிறார்!