“லோக்கல்ல என்னை பாத்தாவே நடுங்குவாங்க.. ஆனா இந்த சாய் சுதர்சன்!” – அஷ்வின் சுவாரசிய பேச்சு!

0
370
Ashwin

இந்திய அணி தற்பொழுது 3 வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு மூன்று கேப்டன்கள் தலைமையில் தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் தற்பொழுது இந்திய இளம் அணி சூரியகுமார் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுல் தலைமையிலும், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலும் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடுகிறது.

இரண்டாவதாக நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சில அதிரடியான சேர்ப்புகள் மற்றும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ரஜத் பட்டிதார் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் ஜெய்ஸ்வாலுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது.

- Advertisement -

இதையெல்லாம் விட முக்கிய திருப்பமாக தமிழகத்தைச் சேர்ந்த இளம் இடதுகை பேட்ஸ்மேன் சாய் சுதர்சனுக்கு அதிரடியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு அழைப்பு வந்திருக்கிறது.

ஐபிஎல் தொடர் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் சாய் சுதர்சன் வெளிப்படுத்தி வரும் திறமை அசாதாரணமானது என்றாலும் கூட, இவ்வளவு சீக்கிரத்தில் அவர் ஒரு நாள் கிரிக்கெட் இந்திய அணிக்கு அழைக்கப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஜெயஸ்வாலுக்கு ஓய்வு தந்து இவருக்கு வாய்ப்பு என்பது பலரால் நம்பவும் முடியவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சாய் சுதர்சன் வாய்ப்பு பற்றி பேசும்பொழுது “அவர் திறமையானவர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இங்கு லோக்கல் கிளப் போட்டிகளில் நான் பந்து வீச வரும்பொழுது, என்னைக் குறித்து பேட்ஸ்மேன்கள் பெரிதாக நினைத்துக் கொள்வார்கள். இது அவர்களுடைய உடல் மொழியிலேயே நன்றாக தெரியும். அவர்களை எப்படியும் அடுத்த 10 பந்தில் ஆட்டம் இழக்க வைக்க முடியும் என்று நினைப்பேன்.

ஆனால் இந்த இடத்தில்தான் சாய் சுதர்சன் வித்தியாசமானவர். அவர் என் பந்துவீச்சில் அனாயமாக லெக் சைடு விளையாடுவார். எப்படி விளையாடுவது என்பது குறித்து அவரிடம் எப்பொழுதும் ஒரு தெளிவான திட்டம் இருக்கும். நான் அவரிடம் ஒருமுறை பார்த்த குறையை இன்னொரு முறை பார்த்தது கிடையாது. அவர் ஒவ்வொன்றையும் சரி செய்து கொண்டே வந்திருக்கிறார்.

மேலும் அவரை நான் முதல் கிளப் போட்டியில் பார்த்த பொழுதே, என்னுடைய கிளப் அணிக்கு வந்து விடுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். அவரிடம் அப்படி ஏதோ ஒரு எக்ஸ் பேக்டர் இருக்கிறது. அதாவது அவர் கடுமையாகப் போராடக்கூடியவர். நிச்சயம் அவர் இந்திய அணிக்காக விளையாடி சாதிப்பார்!” என்று கூறியிருக்கிறார்!