“இந்தியாவுக்கு எதிரா உலக கோப்பை பைனல்ல விளையாட கனவுல கூட நினைக்கல!” – ஆட்டநாயகன் ஹெட் பேட்டி!

0
2713
Head

இன்று 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்வது என தீர்மானித்தது.

- Advertisement -

அந்த அணியின் இந்த முடிவு அவர்களுக்கே தவறாக முடிந்தது. 24 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு முக்கிய விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா இழந்தது. அதற்குப் பிறகு தாக்குப் பிடித்து டேவிட் மில்லர் தனியாகப் போராடி 15 ரன்கள் எடுக்க, தென் ஆப்பிரிக்கா 212 ரன்கள் சேர்த்தது.

இதற்கு அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு, பேட்டிங் செய்ய கொஞ்சம் கடினமான ஆடுகளத்தில் துவக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.

இறுதியாக ஆஸ்திரேலிய அணி ரன் அழுத்தம் இல்லாமல் பொறுமையாக விளையாடி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெல்வதற்கு இவரது அதிரடியான ஆட்டம் காரணமாக அமைந்தது. மேலும் பந்துவீச்சில் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். எனவே இன்றைய போட்டியில் இவரே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

மேலும் நவம்பர் 19ஆம் தேதி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இரண்டாவது முறை மோதுகின்றன. 2003 ஆம் ஆண்டு முதல் முறை மோதியதில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

ஆட்டநாயகன் விருது பெற்ற டிராவிஸ் ஹெட் கூறும்பொழுது “பதட்டமான ஒரு முடிவு ஆனால் அற்புதமான விளையாட்டு. எங்க விக்கெட் எப்படி இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். இங்கு அதிகமாக பந்து ஸ்பின் ஆகவில்லை. இங்கு நாங்கள் அதிகம் போராட வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.

என் கையில் காயம் அடைந்திருந்த பொழுது நான் உலகக் கோப்பை ஆஸ்திரேலிய அணியில் இருக்க மாட்டேன் என்று நினைத்தேன். ஆனால் தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்காக பங்களிப்பது மிகவும் மகிழ்ச்சி.

நான் பந்து வீச வந்ததும் கிளாசன் என்னை அடித்தார். அந்த நேரத்தில் அவர் அடித்து விளையாட இருந்தார். ஆனால் அப்பொழுது அவரது விக்கெட்டை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. நான் நேராக ஸ்டெம்பை நோக்கி வீச முடிவு செய்து இருந்தேன். அணிக்காக சில ஓவர்களை வீச நினைக்கிறேன்.

இருக்கும் வேகத்தை அப்படியே தொடரும் நேர்மறையான எண்ணத்தை நாங்கள் வைத்திருக்கிறோம். நான் ஆட்டம் இழந்த முறை எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. அது இடது கை சுழற் பந்துவீச்சாளருக்கு எதிரான போராட்டமாக இருந்தது.

இந்திய அணி ஒரு நம்ப முடியாத தாக்குதலை வைத்திருக்கிறது. அவர்கள் இதுவரையில் அபாரமான முறையில் விளையாடி வந்திருக்கிறார்கள். அவர்கள் சிறந்த அணிகளில் ஒருவராக இருந்திருக்கிறார்கள். உலகக் கோப்பை இறுதி போட்டியில் அவர்களுக்கு எதிராக விளையாட வேண்டும் என்று நான் கனவிலும் நினைத்தது கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!