ஞாபகம் இருக்கிறதா? 9 பவுண்டரி.. 6 சிக்ஸ்.. 57 பந்தில் மயங்க் அகர்வால் அதிரடி சதம்!

0
815
Mayank

டி20 கிரிக்கெட் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி, ஐபிஎல் தொடர் இந்தியாவில் பிரபலமடைய ஆரம்பித்ததும், ஒவ்வொரு மாநில கிரிக்கெட் வாரியங்களும் தற்பொழுது தனிப்பட்ட முறையில் டி20 லீக்குகளை நடத்தி வருகின்றன.

இதில் தமிழ்நாடு 8 அணிகளை வைத்து மிகச் சிறப்பாக தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 தொடரை நடத்தி வருகிறது. தற்பொழுது இதேபோல கர்நாடக கிரிக்கெட் வாரியம் மகாராஜா டி20 கிரிக்கெட் லீக் என்ற பெயரில் ஆறு அணிகளை வைத்து டி20 தொடரை நடத்தி வருகிறது.

- Advertisement -

இன்று இந்தத் தொடரில் மயங்க் அகர்வால் கேப்டனாக தலைமை ஏற்று இருக்கும் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியும், கருண் நாயர் கேப்டனாக தலைமையேற்று இருக்கும் மைசூர் வாரியர்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்து துவக்க வீரராக அவரே வந்தார். ஆரம்பத்தில் இருந்து அவரது ஆட்டத்தில் பழைய உத்வேகம் தெரிந்தது.

மிகச் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் ஒன்பது பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் இந்த டி20 தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்து 57 பந்தில் 105 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இவரது அதிரடியின் காரணமாக இவரது அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மைசூர் வாரியர்ஸ் அணிக்கு எஸ் கார்த்திக் அதிரடியாக 30 பந்துகளில் ஆறு பவுண்டரி ஆறு சிக்ஸர்கள் உடன் 70 ரன்கள் எடுத்துக் கொடுத்து அசத்தினார். ஆனால் இவர் தந்த அடிப்படையை வேறு யாரும் ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ளவில்லை. கேப்டன் கருண் நாயர் 34 பந்தில் 32 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார்.

மைசூர் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து பத்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடைசி ஓவருக்கு 22 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டபோது 11 ரன்கள் மட்டுமே அந்த அணியால் சேர்க்க முடிந்தது. ஆட்டநாயகனாக மயங்க் அகர்வால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பேட்டிங் டெக்னிக் குறைபாட்டால் இந்திய அணியில் இடத்தை இழந்த மயங்க் அகர்வால், பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ஐபிஎல் தொடரில் நீக்கப்பட்டு, மெகா ஏலத்தில் சன் ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஆனால் ஐபிஎல் தொடரிலும் இவரது ஆட்டம் மிக மோசமானதாகவே இந்த சீசன் அமைந்திருந்தது. தற்பொழுது மீண்டும் பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி கொண்டு இருப்பது நல்ல விஷயம்!