“பாகிஸ்தான தோற்கடிக்க இதை செய்யுங்க!” – ஐடியா கொடுக்கும் சக பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ்!

0
613
Riaz

நாளை 11ஆவது ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை கண்டி பல்லகலே மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடக்க இருக்கிறது!

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நாள் நெருங்க நெருங்க, போட்டியை சுற்றி எதிர்பார்ப்பும் வெப்பமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு இருக்கும் மதிப்பு, இந்தியா பாகிஸ்தான் விளையாடும் சாதாரண போட்டிக்கு இயல்பாக வந்து விடுகிறது!

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை தற்பொழுது உள்ள பெரிய பிரச்சனை எட்டாவது இடத்தில் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டரை விளையாட வைக்க வேண்டுமா? இல்லை ஒரு பந்துவீச்சாளரையே விளையாட வைக்க வேண்டுமா? என்பதாகத்தான் இருக்கிறது.

இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் சமீப காலமாக திறமைக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தாலும் நம்பிக்கைக்கு பஞ்சம் இருக்கிறது. இதன் காரணமாக எட்டாவது இடத்தில் யாரை வைத்து விளையாடுவது என்பது தொடர்பான குழப்பம் தற்பொழுது வரை நீடித்து வருகிறது. இந்த இடத்திற்கு பௌலிங் ஆல்ரவுண்டர் என்றால் அக்சர் படேல் மற்றும் சர்துல் தாக்கூர் இரண்டு பேர் இருக்கிறார்கள்.

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து கூறும் பொழுது “இந்தியா பாகிஸ்தான் விளையாடும் போட்டி என்பது மற்றொரு போட்டி போன்று சாதாரணமானது என்று யாராவது சொன்னால் அது பொய். வீரர்கள் தங்களின் மீது விழும் அழுத்தத்தை திசை திருப்பவும், தாங்கள் அழுத்தத்தில் இல்லை என்று காட்டிக் கொள்ளவும் இப்படிச் சொல்கிறார்கள். உங்களிடமிருந்து சிறந்த ஒன்று வெளிப்பட, வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கத்தான் வேண்டும்.

- Advertisement -

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியை என்னால் மறக்கவே முடியாது. இந்தியாவுக்கு எதிரான எனது முதல் ஆட்டம் அது. நான் விக்கெட் எடுப்பது போன்று மனதிற்குள் காட்சிப்படுத்தி பார்த்துக் கொண்டேன். இந்தியா பாகிஸ்தான் போட்டியின் உற்சாகம் எப்பொழுதும் வேறு மாதிரியானது.

நான் தலா 10 ஓவர்கள் வீசும் பிரதான முழுமையான ஐந்து பந்துவீச்சாளர்களுடன் செல்வேன். உங்களுக்கு ஆறாவது பந்துவீச்சு விருப்பமும் தேவை. உங்களுக்கு மிக முக்கியமாக விக்கெட் தேவை. எனவே இதற்காக பும்ரா, சமி, சிராஜ், குல்தீப், ஜடேஜா என்று நான் அனைவரையும் விளையாடுவேன்.

கண்டி ஆடுகளத்தில் பவுன்ஸ் இருக்கும். ஆனாலும் பொதுவான பேட்டிங் ட்ராக். பனிப்பொழிவு பாரிய பிரச்சனையை உண்டாக்கும். கடந்த ஆண்டு நான் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடிய போது இது எனக்கு தெரியும். எனவே இரண்டாவதாக பேட் செய்யும் அணிக்கு நன்மை உண்டு!” என்று கூறியிருக்கிறார்!