2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றியதில் இருந்து, அந்த அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகவும் அபாயகரமான ஒரு அணியாக இருந்து வருகிறது. தற்பொழுது அவர்களே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் இரண்டு வடிவத்திலும் உலக சாம்பியனாக இருக்கிறார்கள்.
இந்திரலையில் தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், மிகவும் வலிமையான அணியாக கணிக்கப்பட்டது இங்கிலாந்து. அந்த அணியால் களம் இறக்கப்படும் 11 பேரும் பேட்டிங் செய்ய முடியும் என்கின்ற அளவில் பேட்டிங் நீளம் இருந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியில் நடப்பு உலகக் கோப்பை துவக்க ஆட்டத்தில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மோதியது. சாதாரண பந்துவீச்சு யூனிட்டை வைத்திருந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக, இங்கிலாந்தின் பலம் வாய்ந்த பேட்டிங் யூனிட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியாக இல்லை. அவர்கள் அடிப்பதற்கு போய் விக்கெட்டுகளை வேகமாக கொடுத்து சுருண்டார்கள்.
மேலும் அவர்களுடைய பௌலிங் யூனிட் எடுத்துக் கொண்டால் அச்சுறுத்தக் கூடியவர்களாக யாரும் இல்லை. ஆதில் ரசீத் மட்டுமே தன்னுடைய அனுபவத்தால் தாக்கத்தை ஓரளவுக்கு ஏற்படுத்தி வருகிறார். மற்ற எல்லா பந்துவீச்சாளர்களுமே இந்திய ஆடுகளத்தில் மிகவும் சாதாரணமாக தெரிகிறார்கள்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து தோற்றது அவர்களது உலகக்கோப்பை அரை இறுதி வாய்ப்புக்கு மிகப்பெரிய பின்னடைவை தற்பொழுது உருவாக்கி இருக்கிறது. எனவே அவர்களது அணியில் சில கட்டாய மாற்றங்களை ஏற்படுத்தியாக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும் பொழுது “இங்கிலாந்து பென் ஸ்டோக்சை சேர்க்க வேண்டும். அவர் வோக்ஸ் இடத்திலும், அட்கிஸ்டன் சாம்கரன் இடத்திலும் வரவேண்டும். இது இங்கிலாந்தை அதிக நேரம் தீவிரமாக ஆக்ரோஷமாக இருப்பதற்கு உதவி செய்யும்.
சில ஓவர்களை வீசுவதற்கு ஜோ ரூட் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் இருவரும் இருக்கிறார்கள். மும்பையில் நடக்கும் போட்டி சூதாட்டம் போன்றது. அங்கு இரண்டு பந்துவீச்சாளர்களையாவது மறைக்க வேண்டும். இருந்தாலும் இங்கிலாந்துக்கு வேறு வழி கிடையாது. மேலே பார்த்த இரண்டு வீரர்களும் அணிக்கு வந்துதான் ஆக வேண்டும்.
மேலும் இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து போட்டியிட வேண்டும் என்றால் பேட்டிங்தான் சேதத்தை எதிரணிக்கு ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் இங்கிலாந்திடம் வலிமையான பந்துவீச்சு படை இல்லை. மற்றவர்கள் எல்லோரும் இங்கிலாந்தை விட சிறந்த பந்துவீச்சாளர்களை வேகத்துடன் வைத்திருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!