இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சச்சின் கிடையாது என்றும் அவர் குறித்து தான் நினைத்திருந்த ஒரு கணிப்பை அவர் உடைத்து விட்டார் என்றும் பாராட்டி தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தார்.
இந்திய பேட்டிங் பாரம்பரியத்தில் முதல் முறை
இந்திய பேட்டிங் பாரம்பரியத்தில் பொதுவாகவே வலது கை பேட்ஸ்மேன்களே அவரவர் விளையாடும் காலத்தில் முதல் நிலை சூப்பர் ஸ்டார்களாக இருந்திருக்கிறார்கள். உதாரணமாக கவாஸ்கர், சச்சின், விராட் கோலி என்று இந்த பாரம்பரியம் தொடர்கிறது.
இதில் முதல்முறையாக ஒரு இடதுகை பேட்ஸ்மேன் முதல் நிலை சூப்பர் ஸ்டார் ஆக வருவதற்கான வாய்ப்புகள் ஜெய்ஸ்வால் மூலமாக உருவாகி இருக்கிறது. விராட் கோலியின் இடத்திற்கு அடுத்து கில் வருவார் என்று பலரும் பேசி வந்த நிலையில், ஆஸ்திரேலிய மண்ணில் ஜெய்ஸ்வால் சதம் அடித்த பிறகு இந்த பேச்சுகள் மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ஸ்வால் சச்சின் கிடையாது
இது குறித்து இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் சச்சின் நிலையில் இருக்கிறார் என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது இந்திய அணிக்கு ஒரு சிறப்பு மிகுந்த வீரராக இருக்கிறார் என்று என்னால் சொல்ல முடியும். இதை நான் தனிப்பட்ட முறையில் உணருகிறேன். அவர் சிறப்பான ஆட்டக்காரர் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரது அணுகுமுறை அவர் உறுதிப்பாடு மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது”
இதையும் படிங்க : 281 ரன்.. ஏமாற்றிய 1.10 கோடி சூரியவன்சி.. பாகிஸ்தான் இந்திய அணியை வீழ்த்தியது.. U19 ஆசிய கோப்பை 2024
“நான் அவரை யாருடனும் ஒப்பிட விரும்பவில்லை. அவர் ஒரு சிறந்த வெர்ஷன். ஒவ்வொரு நாளும் அவர் மீதான மரியாதை அதிகரித்து வருகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலிய தொடர் அவருக்கு மிகவும் கடினமாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் பெர்த்தில் அவர் முதல் இன்னிங்ஸில் அவுட் ஆகி இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் குவித்த பொழுது அது மாறிவிட்டது. அது பிரில்லியண்டான ஒன்று” என்று கூறியிருக்கிறார்.