2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மூத்த பாஸ்ட் பவுலர் முகமது ஷமியை மீண்டும் சேர்ப்பதில் எந்த பயனும் இல்லை என்றும், இந்திய அணி நிர்வாகம் அவரைத் தாண்டி அடுத்தகட்டத்திற்கு சென்றுவிட்டது என்றும் இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய பாஸ்ட் பவுலர்கள் சமீபத்திய போட்டிகளில் தொடர்ந்து அதிக ரன்களை விட்டுக் கொடுத்து தடுமாறி வரும் நிலையிலும், முகமது ஷமி உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வரும் நிலையிலும், அவரை மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு தேர்வு செய்வது சரியான முடிவாக இருக்காது என்று தினேஷ் கார்த்திக் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கிரிக்பஸ் யூடியூப் சேனலில் பேசும்போது “இல்லை, இந்திய அணியில் வேறு பாஸ்ட் பவுலர்கள் இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். இந்திய அணி அவரைத் தாண்டி அடுத்தகட்டத்திற்கு முன்னேறி சென்றுவிட்டது, எனவே மீண்டும் அவரிடம் செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால் அவர் மிகச் சிறப்பாக பந்துவீசிய போதிலும், நான் முகமது ஷமியை தேர்வு செய்ய மாட்டேன்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் என்பதால், 2027 உலகக்கோப்பைக்கு பிறகு அவர்கள் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றால், அது ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் பேசிய அவர் “ஏனெனில் அவர்கள் இருவரும் தற்கால ஒருநாள் கிரிக்கெட்டின் மிகப்பெரிய அடையாளங்கள். உலக கிரிக்கெட்டின் மையப்புள்ளியாக இந்தியா விளங்கும் சூழலில், நமது இரண்டு சிறந்த கிரிக்கெட் வீரர்களை நாம் இழக்கும் போது, அது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் எதிரொலிக்கும்” என்று கூறி முடித்து இருக்கிறார்.






