டி20 உலக கோப்பையில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு பெற்றுள்ள நிலையில், இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் விளையாட உள்ளது.
இதில் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
டி-20 உலக கோப்பையை பொறுத்த வரை இந்திய அணியின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தாலும், பேட்டிங்கில் ஒரு சில வீரர்களை தவிர, மற்ற அனைவரும் கடந்த மூன்று போட்டிகளில் சொற்ப ரன்களிலேயே வெளியேறி ஆட்டம் இழந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி இதுவரை நடைபெற்ற மூன்று ஆட்டங்களில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனால் விராட் கோலி மூன்றாம் இடத்திலேயே களமிறங்கி பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர். மேலும் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற உள்ளதால் அந்த போட்டிக்கு முன்னதாக விராட் கோலி ஃபார்முக்கு வருவது கட்டாயம்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி குறித்தும், விராட் கோலியின் பேட்டிங் குறித்தும் பேசிய தினேஷ் கார்த்திக், அவரது பேட்டிங் ஃபார்ம் குறித்து கவலைப்பட வேண்டாம். கரீபியனில் அவர் வெடிக்கும் துப்பாக்கியாக இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து தினேஷ் கார்த்திக் விரிவாக கூறும் பொழுது
“முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 50 ரன்கள் விளாசினார். பந்து வீச்சுக்கு சாதகமான அந்த ஆடுகளத்தில் எவ்வளவு ரன்கள் குவிக்க முடியும்?
இந்திய அணியே மொத்தமாக 100 ரன்கள் தான் எடுத்துள்ளது. விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து கவலைப்பட வேண்டியது இல்லை. அவர் முக்கியமான நேரத்தில் நிச்சயமாக பார்முக்கு வந்து விடுவார். அவர் உலகக்கோப்பைகளில் ஒருபோதும் செயல்படத் தவறியதே இல்லை. நிச்சயமாக இந்த உலகக்கோப்பையிலும் சிறப்பாக செயல்படுவார். நிச்சயம் நூறு சதவீதம் விராட் கோலி சரியான நேரத்தில் சரியாக திரும்பி வருவார்.
இதையும் படிங்க:மழையால் ரத்தான போட்டி.. அமெரிக்காவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. பாகிஸ்தானுக்கு நடந்த பரிதாபம்.. அயர்லாந்தும் வெளியேறியது
நாம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளோம். நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். விராட் கோலி கரீபியன் தீவுகளை அடைந்தவுடன், அங்கிருந்து அவர் வெடிக்கும் துப்பாக்கியாக இருப்பார்” என்று கூறி இருக்கிறார். இன்று அமெரிக்காவில் நடைபெற உள்ள கடைசி லீக் போட்டியில் இந்திய அணி கனடா அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையங்கள் தெரிவிக்கின்றன.