இந்த வருடம் நீங்கள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவீர்களா ? அதிரடி பதிலளித்தூள்ள தினேஷ் கார்த்திக்

0
134
Dinesh Karthik RCB

2018 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தினேஷ் கார்த்திக் விளையாடி வந்தார். அவரை இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னர் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் 5 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் கைப்பற்றியது.

நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வி பெற்றது. அதன் பின்னர் கொல்கத்தா ராஜஸ்தான் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று வெற்றி பெற்றது. அதனுடைய 5வது போட்டியில் சமீபத்தில் சென்னை அணிக்கு எதிராக பெங்களூரு அணி தோல்வி அடைந்தது. தற்பொழுது புள்ளி பட்டியலில் 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியுடன் பெங்களூரு அணி 6வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
நான் கணிப்புகளுக்கு ஏற்றவாறு உழைப்பவன் அல்ல

பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக் நடப்பு ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். அந்த அணி வெற்றி பெற்ற அனைத்து போட்டிகளிலும் மிகச் சிறப்பான பினிஷிங் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஐந்து போட்டிகளில் விளையாடி 131 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஐந்து போட்டிகளிலும் அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 200க்கு(218.33) மேல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுகளில் ஒப்பிட்டு பார்க்கையில் பெங்களூரு அணி இந்த ஆண்டு நல்ல பலமான அணியாக விளங்குவதால் அந்த அணி இந்த ஆண்டு முதல் முறையாக முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுமா என்கிற விவாதம் தற்போது எழுந்துள்ளது. ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் நிச்சயமாக இந்த ஆண்டு பெங்களூரு அணி முதல் ஐபிஎல் கோப்பையை கைபற்றி விடும் என்று கணித்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக தினேஷ் கார்த்திக் இடம் கேட்ட போது, “நான் பெரிதாக கணிப்புகளை என் மூளைக்குள் போட்டுக்கொள்ள மாட்டேன். கணிப்புகளுக்கு ஏற்றவாறு நான் உழைக்கவும் மாட்டேன். தற்பொழுது எங்களது அணி மிக சிறப்பான நிலையில் உள்ளது. எங்களது அணி வீரர்கள் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சரியான பாதையில் தான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். இது இப்படியே தொடர வேண்டும், இதில் கணிப்புகளுக்கு மிகப்பெரிய இடமில்லை” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் விளையாடும் விதம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “சூழ்நிலையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அதற்கு ஏற்றவாறு நம்முடைய அனுபவத்தை பயன்படுத்தி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதுதான் நான் செய்து வருகிறேன். பெங்களூர் அணி நிர்வாகம் எனக்கான தெளிவை சரிவர கொடுக்கின்றனர். அதில் நான் என்னுடைய பணியை மிகச் சிறப்பாக அனைத்து போட்டியிலும் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதனுடைய அடுத்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக விளையாட தயாராகி வருகிறது. இப்போட்டி வருகிற 16ம் தேதி அன்று இரவு 7:30 மணி அளவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.