நேற்று இந்திய பந்துவீச்சில் சர்துல் தாக்கூருக்கு சரியான வாய்ப்பை பந்துவீச்சில் தரவில்லை என இந்திய கேப்டன் மீது தினேஷ் கார்த்திக் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் மொத்தம் 100 ஓவர்கள் வீசப்பட்டது. இதில் நான்காவது வேகபந்துவீச்சாளராக சேர்க்கப்பட்ட சர்துல் தாக்கூர் மொத்தம் ஆறு ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். மேலும் அவர் ஆறு ஓவரில் 38 ரன்கள் விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று தேநீர் இடைவேளைக்கு முன்பான கடைசி ஓவரை வீசுவதற்கு கில் சர்துல் தாக்கூரை அழைத்தார். அவர் வந்து ஸ்வெட்டரை கழட்டி நடுவரிடம் கொடுத்த பிறகு, கில் பும்ரா பந்து வீச தயாராக இருப்பதை பார்த்தார். உடனே சர்துலை தடுத்து நிறுத்திவிட்டு பும்ரா கையில் பந்தை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசும்பொழுது ” நேற்று ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்தது. தேனீர் இடைவேளைக்கு முன்பாக சர்துலை பந்துவீச கில் அழைத்தார். அவரும் பந்து வீச தயாராகி தனது ஸ்வெட்டரை கழட்டி நடுவரிடம் கொடுத்து விட்டார். இந்த நிலையில் பும்ரா பந்து வீச தயாராக இருப்பதை பார்த்த கில் உடனே சர்துலை தடுத்து விட்டார். பிறகு எதற்காக அவர் அணியில் இருக்கிறார்?”
“சர்துல் தாக்கூர் பந்துவீச்சில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் எதற்காக அவரை அணியில் சேர்க்க வேண்டும்? நிச்சயமாகவே இது ஒரு பிரச்சனைதான். நீங்கள் ஒரு பந்துவீச்சாளரை நம்பாவிட்டால் அவரை விளையாட வைத்திருக்கக் கூடாது. நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் பொழுது அவருக்கு வாய்ப்பு குறைவாகத்தான் கிடைக்கும் என்பது புரிகிறது. ஆனால் இவ்வளவு ஓவர்கள் வீசப்பட்ட பொழுது ஆறு ஓவர்கள் என்பது மிகக் குறைவு”
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் கேட்ச் விட்டதுக்கு .. என்னால உக்காந்து அழ முடியாது.. இதுக்கு ஒரே வழிதான் இருக்கு – பும்ரா பேட்டி
“எனக்கு சர்துலை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் பந்து வீசும் பொழுது அந்த ஆறு ஓவரிலும் சிறப்பாக வீசவில்லை என்பது உண்மைதான். ஆனால் இன்னும் கொஞ்சம் ஓவர்கள் சேர்த்து கொடுத்திருக்க வேண்டும். மற்றவர்கள் வீசினால் அழுத்தத்தை உருவாக்க முடியும் என கில் நினைப்பது சரிதான். ஆனால் நம்பிக்கை இல்லாத பவுலரை தேர்ந்தெடுத்து இருக்கக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.