இந்திய அணியில் இடம்பெற்ற இளம் வீரர்களுக்கு தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சியான வாழ்த்து – ட்விட்டர் இணைப்பு!

0
779
DK

வருகின்ற அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 16 அணிகளும் தங்களின் 15 பேர் கொண்ட டி20 உலகக்கோப்பை அணியை அறிவித்திருக்கின்றன. ஏதாவது மாற்றங்கள் செய்து கொள்ள கடைசி நாள் அக்டோபர் 9ஆம் தேதி ஆகும்!

இந்த டி20 உலகக்கோப்பைக்காக இந்திய அணியும் தனது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்திருக்கிறது. மேலும் நான்கு ரிசர்வ் வீரர்களையும் அறிவித்திருக்கிறது. உலகக்கோப்பைக்காக இந்திய அணி அக்டோபர் 6ஆம் தேதி ஆஸ்திரேலியா புறப்பட இருக்கிறது.

அதே சமயத்தில் இங்கு இன்னொரு இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத இருக்கிறது. இதற்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்கள்.

இந்த அறிவிக்கப்பட்ட அணியில் உலகக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் இருந்து எந்த வீரரும் இடம்பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தென்ஆப்பிரிக்க அணியுடனான ஒருநாள் தொடருக்கு இளம் வீரர்கள் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மிடில் வரிசை பேட்ஸ்மேன் ரஜத் பட்டிதார், மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் ஆகியோர் புதிதாக இடம்பெற்று உள்ளார்கள்.

இந்த இருவருக்கும் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மற்றும் தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார். அதில் அவர்
” ரஜத் பட்டிதாரை இந்திய அணியில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு அவர் தகுதியானவர். முகேஷ் குமாரை பார்ப்பதும் மகிழ்ச்சியானது. மேலும் இப்போது சர்பராஸ்கான் மற்றும் பாபா இந்திரஜித் இருவரும் இந்திய டெஸ்ட் அணி திட்டத்தில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். சிறந்த திறமைகளை புறக்கணிக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு ஒரு வீரர் காயம் அடைய அதற்கு பதிலாக பெங்களூர் அணிக்குள் ரஜத் பட்டிதார் மீண்டும் வந்தார். வந்தவர் பிளே ஆப் சுற்றில் சதம், அரைசதம் என விளாசி பிரமிக்க வைத்ததோடு, அடுத்து மத்திய பிரதேஷ் அணிக்காக ரஞ்சி தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இதற்கடுத்து நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இதன் மூலம் தற்போது இந்திய ஒருநாள் அணியிலும் இடம் பிடித்து இருக்கிறார். இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு வீரரான வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமாரின் செயல்பாடும் இப்படியானது தான். இதில் ரஜத் பட்டிதார் தினேஷ் கார்த்திக் விளையாடும் பெங்களூர் அணி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது!