சேப்பாக்கில் இதுதான் உங்க கடைசி போட்டியா?.. தினேஷ் கார்த்திக் தந்த பதில்.. கலக்கத்தில் தமிழக ரசிகர்கள்

0
1659

17 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. பெங்களூர் அணியின் விக்கெட்டுகள் விரைவாக வெளியேறிய போதும், இறுதிக்கட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மிக அற்புதமாக பேட்டிங் செய்தார்.

டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அதிரடி நட்சத்திர வீரர்களுக்கு பெயர் போன பெங்களூர் அணி இந்த ஆட்டத்தில் சோபிக்க தவறியது. கேப்டன் டூ ப்ளஸ்சிஸ் தவிர தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 20 பந்துகளில் 21 ரன்களும், ராஜத் பட்டிதார் மற்றும் அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே களமிறங்கிய மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

- Advertisement -

இதனால் பெங்களூர் அணி பழைய ஃபார்முக்கே திரும்ப வந்து விட்டதா? என்று ரசிகர்கள் கிண்டல் செய்து கொண்டிருந்த வேளையில், இளம் வீரர் அனுஜ்ராவத் மற்றும் அனுபவ மூத்த வீரர் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் ஆகியோர் பெங்களூர் அணியின் விக்கெட் சரிவினை தடுத்து நிறுத்தி இருவரும் அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்கள்.

இளம் வீரர் அனுஜ் ராவத் 25 பந்துகளில் நான்கு பவுண்டரி, மூன்று சிக்சர்கள் என 48 ரன்கள் குவித்தார். மற்றொரு மூத்த வீரரான தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 3 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் என 38 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் பெங்களூர் அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.

தற்போது 38 வயதாகும் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் ஃபார்ம் இன்னும் அப்படியே இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சீசனை எவ்வாறு நல்ல விதமாக முடித்துச் சென்றாரோ அதே நிலைமையுடன் தற்போதும் தொடங்கி இருக்கிறார். இதுவரை 243 ஐபிஎல் போட்டிகளை விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் இதுவரை தன் வாழ்நாளில் இரண்டு போட்டிகளை மட்டுமே தவற விட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இது அவரது கிரிக்கெட் மீதான காதலையும், முழு அர்ப்பணிப்பையுமே காட்டுகிறது. எனவே அவரது வயது காரணமாக இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு கடைசியாக இருக்கும் என்று ஒரு தரப்பு கூறப்பட்டு வருகிறது. எனவே போட்டிக்கு பிறகு நிருபர் ஒருவர் தினேஷ் கார்த்திக்கிடம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டியே உங்களது கடைசி போட்டியாக இருக்குமா? என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக்

இதையும் படிங்க: சிஎஸ்கே அறிமுக வீரர் ரச்சின் விக்கெட்.. கோபமாக வழி அனுப்பிய கோலி.. நடந்தது என்ன.?

“உங்களுக்கே தெரியும் இது ஒரு பெரிய கேள்வி என்று.மேலும் ப்ளே ஆஃப் போட்டிகள் மற்றும் சில நாக் அவுட் போட்டிகள் இங்கு நடத்தப்படுவதால் இது என்னுடைய கடைசி போட்டியாக இருக்கக் கூடாது என்று நான் உண்மையிலேயே விரும்புகிறேன். எனவே நான் மீண்டும் இங்கு வர முடியும். அதுவே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கலாம். அவ்வாறு இல்லையெனில் இதுவே எனது கடைசி போட்டியாக இருக்கலாம்” என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்திருக்கிறார். தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் இதுவே தனது கடைசி போட்டியாக இருக்கும் என்று கூறியதால், அவரது ரசிகர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.