விராட் கோலி உடல் நலமில்லாமல் விளையாடினாரா? அனுஷ்கா சர்மா பதிவுக்கு அக்சர் படேல் பதில்!

0
331
Viratkohli

2023 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி இரண்டு ஆட்டங்களையும் ஆஸ்திரேலியா அணி ஒரு ஆட்டத்தையும் வென்று இருந்த நிலையில் தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது!

இந்த போட்டிக்கான டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி உஸ்மான் கவஜா மற்றும் கேமரூன் கிரீன் இருவரது அபார சதத்தால் 480 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

இந்த நிலையில் பதிலடி தரும் விதமாக ஆரம்பித்த இந்திய அணிக்கு சுப்மன் கில் தனது சதத்தின் மூலம் நல்ல துவக்கம் தந்தார். மூன்றாவது நாள் முடிவின்போது விராட் கோலி அரைசதம் அடித்திருக்க இந்திய அணி 19 ரன்கள் பின்தங்கியே இருந்தது.

இன்று தொடர்ந்து விளையாடிய விராட் கோலி அபாரமாக விளையாடி 242 பந்துகள் சந்தித்து ஐந்து பௌண்டரிகள் மட்டுமே அடித்து தனது 28 வது டெஸ்ட் சதத்தை எட்டினார். தொடர்ந்து விளையாடிய அவர் 364 பந்துகளில் 186 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 91 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் உடல் முடியாத சூழ்நிலையிலும் இவ்வளவு கட்டுக்கோப்பாக அமைதியாக அவர் விளையாடுவதுதான் என்னை எப்போதும் ஈர்க்கக்கூடியது என்று பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து அவருடன் இணைந்து 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அக்சர் பட்டேல் இடம் கேட்ட பொழுது ” எனக்குத் தெரியாது. விக்கட்டுகளுக்கு இடையில் அவர் ஓடிக்கொண்டிருந்த விதத்தை பார்த்த பொழுது அவர் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. வெப்பமான காலநிலையில் பார்ட்னர்ஷிப் அமைத்து அவர் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தார். அவருடன் விளையாடுவது மகிழ்ச்சிகரமானது!” என்று கூறி இருக்கிறார்!

1200 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு வந்திருக்கும் இந்த சதம் அவருக்கு மட்டுமல்லாது அணிக்கும் மிக முக்கியமானதாக விளங்கி இருக்கிறது. அதே சமயத்தில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தை உடல் நலம் சரியில்லாமல் விராட் கோலி விளையாடியது தற்பொழுது தெரிய வந்திருக்கிறது!