நேற்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆனால் ஆர்சிபி அணிக்கு நடுவர் சிக்ஸருக்கு பதில் பௌண்டரி கொடுத்தார் என்கின்ற சர்ச்சை சென்று கொண்டிருக்கிறது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி பில் சால்ட் 48 ரன்கள் ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 222 ரன்கள் குவித்தது. இதற்கு அடுத்து பேட்டிங் செய்த ஆர்சிபி அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டி விளையாடியது. எப்படியும் போட்டியை வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.
இதன் காரணமாக அந்த அணிக்கு விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்த போதிலும் கூட, அணியின் ரன் ரேட் மிகவும் சரியாக இருந்து வந்தது. கடைசி கட்டத்தில் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கும் ஜோடியாக இம்பேக்ட் பிளேயர் சுயாஸ் பிரபுதேசாய் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் களத்தில் இருந்தார்கள்.
அப்பொழுது வருண் சக்கரவர்த்தி 17ஆவது ஓவர் வீச கொண்டுவரப்பட்டார். அவர் பிரபுதேசாயை வைத்து முதல் நான்கு பந்துகளை மிக அருமையாக வீசி, ஆர்சிபி அணிக்கு ரன் அழுத்தத்தை ஏற்றினார். இந்த நிலையில் ஐந்தாவது பந்தை தவறி லெக் சைடில் ஷார்ட்டாக வருண் சக்கரவர்த்தி வீசிவிட்டார். இந்தப் பந்தை பைன் லெக் திசையில் பிரபுதேசாய் தூக்கி அடிக்க, கிரிக்கெட் வர்ணனையில் இருந்த அனைவரும் அதை சிக்ஸ் என கூறினார்கள்.
போட்டியை பார்த்த எல்லோருமே அதை சிக்ஸ் எனவே நினைத்து கடந்து விட்டார்கள். ஆனால் அந்தப் பந்துக்கு நடுவர் பவுண்டரி கொடுத்திருக்கிறார். போட்டி நடுவர் நான்காவது நடுவரிடம் சென்ற பொழுது, அவர் அதை பரிசோதித்து பவுண்டரி எனக் கூறியிருக்கிறார். பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க : இம்பேக்ட் பிளேயரில் தொடர்ந்து சொதப்பும் சிஎஸ்கே.. சாம்சன் போல ருதுராஜ் பிரில்லியன்ட் காட்டுவாரா?
ஆனால் போட்டியை பார்த்த ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கும் அது பவுண்டரியா இல்லை சிக்ஸரா என்கின்ற குழப்பம் இன்றும் நீடிக்கிறது. காரணம் பந்தை அடித்ததும், பந்து சென்று கொண்டிருந்த கோணத்தில் மட்டுமே கேமரா காட்டப்பட்டது. மாறாக பந்து கோட்டுக்கு வெளியில் விழுந்ததா உள்ளே விழுந்ததா என்று, பக்கவாட்டில் அதாவது சைடில் இருந்து கேமரா கோணத்தில் காட்டப்படவில்லை. ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போட்டியில், இந்தக் குளறுபடிகள் ஆர் சி பி ரசிகர்களை கடுமையாக கோபமடைய வைத்திருக்கிறது. அவர்கள் தொடர்ந்து இதை சமூக வலைதளத்தில் பரப்பி பேசி வருகிறார்கள்!