தோனியின் 16 வருட சாதனை காலி.. சூரியகுமார் புது ரூட்டில் புது ரெக்கார்ட்!

0
185
Surya

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் தற்பொழுது மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட இன்று இரண்டாவது போட்டி நடைபெறுகிறது. இந்திய அணி புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையிலும், தென் ஆப்பிரிக்க அணி புதிய கேப்டன் எய்டன் மார்க்ரம் தலைமையிலும் விளையாடுகிறது.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்து அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாக தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். தற்பொழுது இது தென் ஆப்பிரிக்க டி20 தொடரிலும் தொடர்கிறது.

இன்று டாஸ் தோற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு இந்த முறை துவக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி வந்தது. ஆனால் இருவருமே ரன் இல்லாமல் பூஜ்ஜியத்தில் வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து திலக் வர்மா உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் எப்பொழுதும் போல் அவருடைய பாணியில் விளையாட ஆரம்பித்தார். இன்னொரு முனையில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 20 பந்தில் 29 ரன்கள் எடுத்து, பவர் பிளேம் முடிய ஒரு பந்து மீதம் இருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

ஆனாலும் கூட அசராத கேப்டன் சூரியகுமார் யாதவ் தொடர்ந்து அதிரடியில் ஈடுபட்டு ரன் சேர்த்தார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் அரை சதம் கடந்தார். மேலும் குறைந்த பந்துகளில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்த வீரர் என்கின்ற அரிய உலக சாதனையையும் படைத்தார்.

தொடர்ந்து விளையாடிய சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன்மூலம் சூர்யா குமார் யாதவுக்கு வித்தியாசமான முறையில் ஒரு சாதனையும் வந்து சேர்ந்திருக்கிறது.

தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய கேப்டன் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்னாக சூரியகுமார் அடித்த 56 ரன்கள் பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்பாக 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிராக டி20 போட்டியில் மகேந்திர சிங் தோனி 45 ரன்கள் எடுத்தது முதல் இடத்தில் இருந்தது. தற்பொழுது மகேந்திர சிங் தோனி இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறார். மேலும் 2007 ஆம் ஆண்டில் 37 ரன்கள் எடுத்து மூன்றாம் இடத்திலும் மகேந்திர சிங் தோனியே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!