“என் மனைவியிடம் 30 லட்சம் சம்பாதித்தால் போதும் என்று தோனி சொன்னார்!” – சுவாரசியமான சம்பவத்தை பகிர்ந்த வாசிம் ஜாஃபர்!

0
2071
Jaffer

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி இன்று தனது 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. அவருடன் விளையாடிய வீரர்கள், இளம் வீரர்கள், அரசியல்வாதிகள், பிசிசிஐ நிர்வாகிகள் என்று பல பக்கங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

உலக கிரிக்கெட் 50 ஓவர் உலகக் கோப்பை 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்றையும் வென்ற ஒரே சாதனை கேப்டனாக மகேந்திர சிங் தோனி ஒருவர் மட்டுமே இருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி தன் வெற்றிகளால் மட்டும் அல்லாமல் தன்னுடைய ஆட்ட அணுகு முறையாலும் வீரர்களை திறமையாக புத்திசாலித்தனமாக வழிநடத்தும் முறையிலும் பலரையும் கவர்ந்த ஒரு கேப்டனாக தனித்துவமானவராக விளங்குகிறார். மற்றவர்களை விட அவரது அதிகபட்ச புகழ்வான வாழ்க்கைக்கு இதுவே மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

இன்று புகழில் எவ்வளவோ மடங்கு உயர்ந்து, எவ்வளவோ பணத்தை சம்பாதித்து இருக்கும் மகேந்திர சிங் தோனி, ஆரம்ப காலகட்டத்தில் தன் மனைவியிடம் தன் எதிர்கால வாழ்வு குறித்து என்ன பகிர்ந்து கொண்டார் என்று தற்பொழுது இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து வாசிம் ஜாபர் கூறும் பொழுது ” 2005 ஆம் ஆண்டில் நான் இந்திய அணிக்கு திரும்பினேன். 2004 ஆம் ஆண்டு இறுதியில் தோனி வந்திருந்தார். அப்பொழுது தினேஷ் கார்த்திக் அவரது மனைவி உடன் வந்தார். எங்களுக்கு பக்கத்தில் மகேந்திர சிங் தோனி இருந்தார்.

அப்போது என் மனைவியிடம் பேசிக் கொண்டு வந்த அவர், தான் 30 லட்சம் சம்பாதிக்க விரும்புவதாகவும், அந்தப் பணம் இருந்தால் தன்னுடைய வாழ்க்கையை ராஞ்சியில் நிம்மதியாக வாழ முடியும் என்றும் கூறினார். மேலும் ராஞ்சியை விட்டு தான் வெளியேற விரும்பவில்லை என்றும் கூறினார்.

அவர் அணிக்கு புதியவர். அவர் அந்த நேரத்தில் தன் வாழ்க்கைக்கு 30 லட்சம் ரூபாய் போதும் என்று என் மனைவியிடம் பேசியது இன்னும் என்னுடைய நினைவில் இருக்கிறது. அவர் வாழ்க்கையில் இவ்வளவு புகழ் பெருமைகளை அடைந்து விட்ட பொழுதும் அவர் ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ இன்றும் அப்படியே இருக்கிறார். அவர் எல்லா விஷயங்களையும் எளிமையாகவே வைத்திருக்கிறார்.

அவர் காலப்போக்கில் தனது செயல்முறைகளை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் அமைதியாகவே இருக்கிறார். கேப்டனாக நிறைய சாதித்த பிறகும் அவர் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. அதாவது அவர் எதையும் பார்க்கும் விதம் அணுகும்விதம் என்று எதையும் மாற்றிக் கொள்ளவில்லை என்பதாக நான் உணர்கிறேன்” என்று கூறியிருக்கிறார்!