தோனியின் விக்கெட் கீப்பிங் குறித்து கடுமையாக சாடியிருக்கிறார் பாக்., அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்திப்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக வளம் வந்தவர் ஆவார். ஐசிசி நடத்திய 3 முக்கியமான தொடரிலும் கோப்பைகளை வென்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்ததோடு மட்டுமல்லாமல், தற்போது வரை அந்த சாதனையை எவரும் முறியடிக்க முடியாத இடத்தில் இருக்கிறார்.
கேப்டன் பொறுப்பில் மட்டுமல்லாது தனது கீப்பிங்கிலும் அபாரமாக செயல்பட்ட தோனி, அதிக அளவிலான ஸ்டம்பிங் செய்து முதலிடத்தில் இருக்கிறார். கீழ் வரிசையில் களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலிலும் முன்னிலையில் இருக்கிறார். இப்படி பேட்டிங் கீப்பிங் மற்றும் கேப்டன் பொறுப்பு என அனைத்திலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட இவருக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த சூழலில் தோனியின் விக்கெட் கீப்பிங் அவ்வளவு சிறப்பாக இல்லை, இருப்பதிலேயே அதிக தவறுகள் அவர்தான் செய்திருக்கிறார் என புள்ளி விவரங்களோடு பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ரசித் லத்தீப் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் கூறியதாவது:
“தோனி சிறப்பான விக்கெட் கீப்பிங் – பேட்ஸ்மேன் என பெயர் எடுத்திருக்கிறார். கிரிக்கெட் வட்டாரத்தில் அவரது பெயர் மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறது. ஆனால் நான் புள்ளிவிவரங்களை முன்னால் வைத்தால், அவர் எந்த அளவிற்கு தவறுகள் செய்திருக்கிறார் என உங்களால் புரிந்துகொள்ள முடியும். கிட்டத்தட்ட 21 சதவீதம் கேட்சுகளை அவர் தவறவிட்டிருக்கிறார். சமகாலத்தில் இது மிகப்பெரிய அளவிலான தவறாகும். இதற்கு இணையாக வேறு எவரும் தவறு செய்வதில்லை.
நான் விளையாடிய காலகட்டத்தை பார்க்கும் பொழுது, அந்த சமயத்தில் ஆடம் கில்கிரிஸ்ட் மற்றும் மார்க் பவுச்சர் ஆகியோர் திறமையான விக்கெட் கீப்பர்களாக பார்க்கப்பட்டனர். அந்த சமயத்திலேயே கில்க்ரிஸ்ட் தவறவிட்ட கேட்சுகள் 11 சதவீதம்.” என குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் லத்திப், ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயான் ஹேலி தன்னைக் கவர்ந்த மிகச் சிறப்பான கீப்பர் என தெரிவித்தார். அப்போதைய காலகட்டத்தில் துணைகண்டங்களில் ஷென் வார்னே போன்ற சுழல் பந்துவீச்சாளர்களுக்கு கீப்பிங் செய்வது அவ்வளவு எளிதல்ல. அதனை இயான் ஹேலி மிகச்சிறப்பாக செய்தார். ஆகையால் எனக்கு மிகவும் பிடித்தமான விக்கெட் கீப்பர் அவர் என தெரிவித்தார்.
மேலும் பேசி அவர், “கடந்த 15 ஆண்டுகளில் மிகச் சிறப்பான விக்கெட் கீப்பராக குவிண்டன் டீ காக் இருக்கிறார். மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் அவ்வளவு சிறப்பாக கீப்பிங் செய்கிறார். அரிதாக கேட்ச்களை தவறவிடுகிறார். மேலும் துவக்க வீரராக களம்மிறங்கி எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்.” என்றார்.