தோனி தயாரிக்கும் தமிழ் படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகில் கோலோச்சிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் சீசனில் இருந்து தற்போது வரை விளையாடுகிறார். இதனால் தமிழ் மக்கள் பலரின் அன்பையும் ஆதரவையும் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ‘தோனி என்டர்டெயின்மென்ட்’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை மகேந்திர சிங் தோனி துவங்கினார். தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் படம் தமிழில் தயாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மூன்று மாதம் கழித்து தற்போது தோனி தயாரிக்க உள்ள படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் பொறியாளன், தாராள பிரபு, பியார் பிரேம காதல் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்த இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றியை பெற்ற ‘லவ் டுடே’ படத்தில் நடித்திருந்த இவானா இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர்.

மேலும் இந்த படத்தில் யோகி பாபு, நதியா உள்ளிட்ட பிரபலங்களும் இருக்கின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று தோனி என்டர்டெயின்மென்ட் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. படத்தின் பெயருக்கான மோஷன் பிக்சரையும் வெளியிட்டது.
படத்தின் பெயர் “LGM – Let’s Get Married”. இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார்.