ஆசிய கோப்பையில் இவர் நிச்சயம் கம்பேக் கொடுப்பார் – கங்குலி உறுதி!

0
135

ஆசிய கோப்பையில் விராட் கோலி பழைய பார்மிற்கு திரும்புவார் என கங்குலி உறுதியளித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோலி கடந்த சில ஆண்டுகளாக தனது பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருகிறார் என தொடர்ந்து விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கு ஏற்றார்போல அவரும் தன் தவறுகளை சரி செய்து கொள்ளாமல் தொடர்ந்து சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து வருகிறார். இந்நிலையில் அவ்வப்போது அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு வெளியிலும் அமர்த்தப்பட்டார். மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் விராட் கோலிக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

மீண்டும் ஆசியக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள், 2 டி20 போட்டியில் 12 ரன்கள் மற்றும் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் 33 ரன்கள் என படுமோசமாக விளையாடினார். சாதாரணமாக 50 சராசரிக்கும் மேல் வைத்திருக்கும் இவர், சமீப காலமாக 30க்கும் கீழே சராசரிகளை கொண்டிருக்கிறார். இவரது இடத்தை நிரப்ப ஏற்கனவே பல வீரர்கள் வந்து விட்டனர். இனியும் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்படுமா? என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மற்றும் இந்திய அணியில் அவரது இடம் எத்தகையது என்பது பற்றி தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் சவுரவ் கங்குலி. “விராட் கோலி மிகப் பெரிய வீரர். மிகுந்த அனுபவத்தை கொண்டிருக்கிறார். அவரை வெளியில் வைத்துவிட்டு அவ்வளவு எளிதாக மிகப்பெரிய தொடர்களில் விளையாட முடியாது. நிச்சயம் தனது மோசமான பேட்டிங்கில் இருந்து அவர் வெளிவருவதற்கு பல முயற்சிகளை செய்து வருகிறார். அவர் தனது பயிற்சியில் ஈடுபடட்டும். ஆசிய கோப்பை தொடரில் மீண்டும் பழைய ஃபார்ம்மிற்கு திரும்புவார் என நான் நம்புகிறேன். ஒரு செஞ்சுரி அடிக்கும் வரை தான் அவர் இத்தகைய விமர்சனத்திற்கு உள்ளே இருப்பார். அதை கடந்து விட்டால் நிச்சயம் அவரையும் இன்னொரு கட்ட பேட்டிங்கை பார்க்கலாம்.” என்று உறுதியாக பேசினார்.

தற்போது பிசிசிஐ தலைவராக இருந்து வரும் சௌரவ் கங்குலி, ஐசிசி சேர்மன் தேர்தலில் போட்டியிடும் முக்கியமான ஒருவராகவும் இருக்கிறார். மேலும் அந்த தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த ஐசிசி சேர்மன் ஆகவும் இவர் வருவார் என்று தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு பதில் அளித்த கங்குலி, “இவை அனைத்தும் தற்போது கதை. இன்னும் பிசிசிஐ இது குறித்து முடிவுகள் மேற்கொள்ளவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் அறிக்கைகள் மூலம் அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.” என்று தெளிவுபடுத்தினார்.

- Advertisement -