இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றுவிட்டால் தென்னாப்பிரிக்க நாட்டில் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று கைப்பற்றும். இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் அதிக முனைப்புடன் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கோலி காயமுற்றதால் தற்போது கேப்டனாக விளையாடிக் கொண்டிருக்கும் கேஎல் ராகுல் அதிகபட்சமாக அரை சதம் அடித்தார். தன்னுடைய முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரிடம் மொத்தமாக சரணடைந்து 229 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதன் பின்பு தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணிக்கு சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரகானே இருவரும் இணைந்து சிறப்பாக அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அதிக நாட்களாக பெரிதாக ரன்கள் அடிக்காமல் இருந்த இவர்கள் முக்கியமான நேரத்தில் இருவருமே அரைசதம் கடந்து அசத்தினர். ஆனால் அதற்குப் பின்பு வந்த வீரர்கள் அடித்தளத்தை பயன்படுத்தாமல் வேகமாக ஆட்டமிழந்து வெளியேறினர். குறிப்பாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த முறை பலருக்கு சமூக வலைதளங்களில் கோபத்தை ஏற்படுத்தியது.
இவை எல்லாவற்றையும் விட நேற்றைய ஆட்டத்தில் அதிகம் கவனம் ஈர்த்த விஷயம் என்னவென்றால் இந்தியாவின் பும்ராவும் தென் ஆப்ரிக்காவின் யன்செனும் மோதிக் கொண்டது தான். தென் ஆப்பிரிக்க அணிக்கு வது விக்கெட்டை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த யன்சென், ஷாட் பிட்ச் பந்துகளாக வீசி வந்தார். இதன் சில பந்துகள் பும்ராவின் தோள்பட்டையில் அடித்துச் செல்ல இரண்டு வீரரும் சிறிதாக முறைத்து கொண்டனர். நடுவர் எராஸ்மஸ் இருவருக்கும் இடையில் தலையிட்டு சமாதானம் பண்ணி வைத்தார்.
What happened there between Bumrah and Jansen?#INDvsSA pic.twitter.com/Auc4F2GMop
— Ashish Satyam (@AshishSatyam7) January 5, 2022
இதுகுறித்து தற்போது ட்விட்டர் தளத்தில் பேசியுள்ள தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இதை சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பும்ரா இதையேதான் இங்கிலாந்து தொடரில் ஆண்டர்சனிடம் செய்தார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். தாம் செய்வது தனக்கே திரும்ப வரும்போது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுவது போல் டேல் ஸ்டெய்னின் பதிவு உள்ளது.
I swear I remember Bumrah doing the same thing to a Mr James Anderson not too long ago.
— Dale Steyn (@DaleSteyn62) January 5, 2022
Learn to take it kid.
இதனால் ஆக்ரோஷம் அடைந்து பும்ரா இன்று இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தருவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.