எல்-கிளாசிகோ போட்டியில் சிஎஸ்கே அபார வெற்றி; மும்பையை சுருட்டி வீசியது!

0
149
CSK

ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இன்டியன்ஸ் அணிக்கும் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் ஒருதரப்பு ஆட்டமாக நடந்து முடிந்திருக்கிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். சென்னை அணியில் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி இருவரும் சிறிய காயத்தால் இடம் பெறவில்லை. மும்பை அணியில் ஆர்ச்சர் இடம் பெறவில்லை. இவர்களுக்குப் பதிலாக துஷார், ரகானே மற்றும் ஸ்டப்ஸ் இரு அணிகளிலும் இடம் பெற்றார்கள்.

- Advertisement -

இந்த முறை ஆட்டத்தை துவங்க வந்த மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓரளவுக்கு சுமாராக தொடங்கி 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து துஷார் பந்தில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்து இஷான் கிஷான் 32 ரன்னிலும், கேமரூன் கிரீன் 12 ரன்னிலும் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கடுத்து சான்ட்னர் பந்துவீச்சில் தோனியின் அபாரமான ரிவ்யூவால் சூரியகுமார் யாதவ் அவரிடம் கேட்ச் கொடுத்து ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். மும்பை அணியின் கடந்த ஆட்டநாயகன் திலக் வர்மா இந்த முறை 22 ரன்னில் ஜடேஜாவால் ஆட்டம் இழந்தார். அர்ஷத் கான் 2 ரன்னில் சான்ட்னர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

சிறப்பாக விளையாட ஆரம்பித்த டிம் டேவிட் துசார் பந்துவீச்சில் பவுண்டரி சிக்ஸர் அடித்து அதே ஓவரில் ரகானே இடம் கேட்ச் கொடுத்து 31 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஸ்டப்ஸ் ஐந்து ரன்னில் மகலா பந்தில் வெளியேறினார். ஹிர்த்திக் சோக்கின் 18 ரன்னிலும், பியூஸ் சாவ்லா ஐந்து ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்கள். நிர்ணியிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. நான்கு ஓவர்கள் பந்துவீசி 20 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கட்டுகளை ஜடேஜா வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் பந்துவீசி 28 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை சான்ட்னர் வீழ்த்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து கொஞ்சம் எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர் கான்வேவை பெகரன்டாப் ரன் ஏதும் இல்லாமல் வெளியேற்றினார். இதற்கு அடுத்து ரகானே மூன்றாவது வீரராக ருதுராஜ் உடன் சேர்ந்தார்.

இந்த முறை ருதுராஜுக்கு பதிலாக ரகானேவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. பவுண்டரியும் சிக்ஸர்களுமாக வெளுத்துக் கட்டினார். 19 பந்துகளை சந்தித்த அவர் ஆறு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் சிஎஸ்கே அணிக்காக அதிவேக இரண்டாவது அரை சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 27 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து வந்த சிவம் துபே 26 பந்தில் 28 ரன்கள் எடுத்து கார்த்திகேயா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். பின்பு ருதுராஜ் உடன் அம்பதி ராயுடு கூட்டணி அமைக்க சென்னை அணி வெகு எளிதாக 18.1 ஓவரில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இறுதி வரை ஆட்டம் இழக்காமல் நின்ற ருதுராஜ் 36 பந்தில் 40 ரன்கள், அம்பதி ராயுடு 16 பந்தில் 20 ரன்கள் எடுத்தார்கள்.

இரண்டாவது போட்டியில் விளையாடிய மும்பை அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். மூன்றாவது போட்டியில் விளையாடிய சென்னை அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். சென்னை அணி இந்த சீசனில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பழைய வெற்றிகரமான ஆட்ட முறைக்குத் திரும்பி கொண்டிருக்கிறது!