நடப்பு ஐபிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய டெல்லி அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. சிஎஸ்கேவில் இரண்டு மாற்றங்களாக டெவான் கான்வே மற்றும் முகேஷ் சௌத்ரி ஆகியோர் சிஎஸ்கே அணிக்குள் கொண்டுவரப்ட்டு தீபக் ஹடா மற்றும் ராகுல் திருப்பதி ஆகியோர் நீக்கப்பட்டனர். இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க வீரர் ஜேக் பிரேசர் தனது 5வது பந்தில் கலில் அகமதுவின் பந்துவீச்சில் வெளியேறினார். பாப் டூ பிளஸ்சிஸ் காயம் காரணமாக வெளியேற, அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் தொடக்க இடத்தில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில் மூன்றாவது வரிசை வீரர் அபிஷேக் பொரேல் 33 ரன்கள், கேப்டன் அக்சார் பட்டேல் 21 ரன்கள் குவித்து வெளியேற கேஎல் ராகுல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 51 பந்துகளை எதிர் கொண்ட ராகுல் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 77 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதிக்கட்டத்தில் ஸ்டெப்ஸ் 14 பந்துகளில் 21 ரன்கள் குவிக்க டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. சிஎஸ்கேவில் அதிகபட்சமாக கலில் அகமது இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் 3 ரன்னில் முகேஷ் குமார் பந்துவீச்சில் வெளியேறினார். கேப்டன் ருத்ராஜ் 5 ரன்னில் ஸ்டார்க் பந்து வீச்சில் நடையை கட்டினார். மற்றொரு தொடக்க வீரர் கான்வே 14 பந்தில் 13 ரன்னில் வெளியேற, பவர் பிளேவிற்குள் 41 ரன்னில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்ததால் சென்னை அணியின் தோல்வி அப்போதே உறுதியானது. அதற்குப் பிறகு மிடில் வரிசை பேட்ஸ்மேன் விஜய் சங்கர் மிகவும் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க:43.96.. 100 இன்னிங்ஸ்..விராட்டை தாண்டி கேஎல் ராகுல் 2 மாஸ் ரெக்கார்டு.. சிஎஸ்கேவுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்
இடையில் சிவம் துபே 18 ரன்னில் வெளியேற, விஜய்சங்கர் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் போட்டியை கடைசிவரை எடுத்துச் சென்றாலும், அவர்களால் சென்னை அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. 54 பந்துகளை எதிர்கொண்ட விஜய் சங்கர் 69 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் குறிப்பாக சென்னை அணிக்கு 30 பந்துகளில் 78 ரன்கள் தேவைப்பட்டபோது 16வது ஓவரில் இருந்து மோகித் சர்மா வீச, ஆரம்பித்தது முதல் விஜய் சங்கர் எந்த ஒரு அதிரடியையும் காட்டவில்லை. அந்த ஓவரில் 6 ரன்கள், அக்சார் வீசிய 17வது ஓவரில் 5 ரன்கள் என கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே எந்த விதமான போராட்ட குணத்தையும் வெளிப்படுத்தாததால் போட்டியின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்து 25 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதில் எம் எஸ் தோனி 26 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்திருக்கும் சிஎஸ்கே புள்ளி பட்டியலிலும் எட்டாவது இடத்தில் தொடர்ந்து நீடிப்பது குறிப்பிடத்தக்கது.