ஆர்சிபியை கேலி செய்த சிஎஸ்கே ரசிகை.. தற்போது ஆர்சிபி வாங்கியதும்.. யூடர்ன் அடித்த இங்கிலாந்து வீராங்கனை.!

0
1376

பெண்கள் பிரீமியர் லீக் தொடரானது அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏலம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்கள் ஆர்சிபி அணியை இதுவரை ட்ரோல் செய்து வந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை ஒருவரைத் தற்போது பெண்கள் ஆர்சிபி அணியே ஏலத்தில் வாங்கியது சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆண்கள் ஐபிஎல் தொடரை போன்று பெண்களுக்கான ஐபிஎல் தொடரானது கடந்த வருடம் மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. இதில் இந்திய வீராங்கனைகள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

- Advertisement -

இதில் மும்பை, குஜராத், டெல்லி, உத்திர பிரதேசம் மற்றும் பெங்களூரு அணிகள் கலந்து கொண்டன. இதன் ஆரம்பப் போட்டி முதலே ரசிகர்களுக்கு நல்ல விருந்தாய் அமைந்தது. பெண்கள் பிரிமியர் லீக்கிலும் மும்பை அணியினர் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. மும்பை அணிக்கு இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மன்பிரித் கவுர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இவரது தலைமையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடி, இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வென்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. ஆனால் பெங்களூர் அணி எட்டு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று ஆறு போட்டியில் தோல்வியை தழுவியது. பெங்களூர் அணிக்கு இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா கேப்டனாக செயல்பட்டார்.

பெங்களூர் அணிக்கு நல்ல பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும் திறமையான பந்துவீச்சாளர்கள் இல்லாததால் அவர்களால் போதிய வெற்றியைப் பெற முடியவில்லை. எனவே இதனை சரி செய்யும் பொருட்டு பெங்களூர் அணி இங்கிலாந்து வீராங்கனை கேட் கிராஸை 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. எனவே கிராஸ், எல்லிஸ் பெர்ரியுடன் இணைந்து வேகப்பந்துத் தாக்குதலைத் தொடுப்பார்.

- Advertisement -

இதில் சுவாரசியம் என்னவென்றால் கேட் கிராஸ் மிகத் தீவிரமான சிஎஸ்கே ரசிகை ஆவார். இவர் கடந்த காலங்களில் ஆர்சிபி அணியை ட்ரோல் செய்து போடப்பட்ட ட்வீட்டுகளை தற்போது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இவர் ஒரு ட்வீட்டில், சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு வர வேண்டும் என்றும், அட்டவணையில் பாதிக்கும் கீழ் இருந்த ஆர்சிபி அணியைக் கிண்டல் அடிக்கும் விதமாகவும் பதிவிட்டு இருந்தார்.

இன்னொரு ட்வீட்டில் ரசிகர் ஒருவர் ஆர்சிபி அணி வரும் ஐபிஎல்லில் வெற்றி பெறாது என்று கூற, இதற்கு பதில் அளித்த கேட் “நல்ல வேலை நான் ஆர்சிபி அணியை ஆதரிக்கவில்லை” என்றும் கிண்டலாக பதிலளித்தார். ஆனால் விதி விளையாட்டாக தற்போது ஆர்சிபி அணியே அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.

இதனைக் குறிக்கும் விதமாக கேட்கிராஸ், ஆர்சிபிக்கு எப்போதும் ஒரு மென்மையான இடம் உண்டு என்று தற்போது யூடர்ன் அடித்துள்ளார். அவரது இந்த பதிவும் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆர்சிபி அணிக்கு எதிராக விமர்சனங்களைப் பதிவிட்டு வந்த கேட் கிராஸ் தற்போது அந்த அணிக்காகவே விளையாட இருப்பது சுவாரசியத்தைக் கூட்டுகிறது.