கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆல்ரவுண்டர் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலக்கிய ரவீந்திர ஜடேஜா நடப்பு ஐபிஎல் தொடரில் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை.
நடப்பு தொடரின் ஆரம்பத்திலேயே அவருக்கு கேப்டன் பதவி கிடைத்தது. இனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரது தலைமையில் செயல்படும் என்று சென்னை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஜடேஜா தலைமையில் சென்னை அணி அடுக்கடுக்கான தோல்வியை தழுவியது.
பின்னர் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய கேப்டன் பதவியை மீண்டும் மகேந்திர சிங் தோனி இடம் ஒப்படைத்தார். தன்னுடைய விளையாட்டில் எந்த வித அழுத்தமும் இன்றி கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி, கேப்டன் பதவியை எம்எஸ் தோனி இடம் ஒப்படைத்தார். அதற்கு சென்னை அணி நிர்வாகமும் ஒப்புதல் அளித்தது. தற்பொழுது எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு கடுமையாக போராடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ள ரவிந்திர ஜடேஜா
மேலே கூறியது போல நடப்பு ஐபிஎல் தொடரில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சுமாராகவே விளையாடி உள்ளார். கேப்டன்சி பொறுப்பை எம்எஸ் தோனி இடம் கொடுத்த பின்னர் அவர் சிறப்பாக இனி விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்தனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக ரவீந்திர ஜடேஜாவின் விலா எலும்பில் காயம் இருப்பதாகவும், மருத்துவ குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் அவர் தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அவர் வெளியேறி விட்டதாகவும் தகவல் உறுதியானது.
சமூக வலைதளத்தில் எழுந்த கட்டுக்கதைகள்
ரவீந்திர ஜடேஜாவை இன்ஸ்டகிரம் வலைதளத்தில் சென்னை அணி நிர்வாகம் அன் ஃபாலோ செய்தது. அதேசமயம் காயம் காரணமாக அவர் இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இதையெல்லாம் வைத்து குத்துமதிப்பாக சென்னை அணி நிர்வாகமும் ரவீந்திர ஜடேஜா புறக்கணிக்கிறது என்று கட்டுக்கதைகள் சமூகவலைதளத்தில் எழுந்தன.
அந்த கட்டுக்கதைகளுக்கு தற்போது சென்னை அணியின் சிஇஓ காசிவிஸ்வநாதன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.”மருத்துவ குழுவின் ஆலோசனைப்படி தான் அவர் தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். சமூக வலைத்தளத்தில் தற்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் உறுதி ரவீந்திர ஜடேஜா எப்பொழுதும் சென்னை அணியின் வீரர் தான். அது தற்பொழுதும் சரி எதிர்காலத்திலும் சரி. இதில் எந்தவித மாற்றமும் இல்லை”, என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.