“சிஎஸ்கே அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன்” – தரமான பதிலடி கொடுத்து அனுப்பிய அஷ்வின்!

0
48903
Ashwin

தற்போது உலகக் கிரிக்கெட்டில் உலகக்கோப்பைகளை விட மிகவும் முக்கியத்துவம் கொண்ட தொடராக இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வரும் ஐபிஎல் தொடர் இருக்கிறது.

வருடத்திற்கு இரண்டு மாதங்கள் சர்வதேச அட்டவணையில் ஐபிஎல் தொடருக்கு ஏறக்குறைய எல்லா பெரிய அணிகளும் ஒதுக்கி இருக்கின்றன. இரண்டு மாதங்கள் மொத்த கிரிக்கெட் உலகமும் இந்தியாவில்தான் முகாமிடுகின்றன.

- Advertisement -

வளர்ந்து வரும் ஒவ்வொரு வீரர்களின் கனவாகவும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது இருக்கிறது. இந்த இரண்டு மாதங்கள் விளையாடி கிடைக்கும் பணம், அவர்களுக்கு மிகப்பெரிய தொகையாக வருகிறது.

மேலும் ஐபிஎல் தொடரில் சம்பளம் மட்டும் இல்லாமல் வீரர்களுக்கான வசதி மற்றும் பாதுகாப்பு, போட்டி ஏற்பாடுகள் மற்றும் தரம் என எல்லாமே ஐசிசி தொடர்களை விட உச்சத்தில் இருக்கிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடர் நெருங்குவதற்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பாகவே, ஐபிஎல் களம் சூடு பிடித்து விடும். மேலும் இந்த காலக்கட்டத்தில் ஐபிஎல் மினி ஏலம் நடப்பதும் முக்கியமான விஷயம்.

இந்த வகையில் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிந்து ஒரு வாரத்திற்குள் மொத்த கிரிக்கெட் உலகமும் ஐபிஎல் தொடர் நோக்கி நகர்ந்துவிட்டது. வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் ஐபிஎல் மினி ஏலம் நடக்கிறது.

- Advertisement -

இதை ஒட்டி ட்விட்டரில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாக ஒரு தகவலை பகிரும் போது ” அஸ்வின் தன்னுடைய யூடியூப் சேனலில் சிஎஸ்கே நிர்வாகம் கேப்டனாக சஞ்சு சாம்சனை அணுகியது, இது கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டது. ஆனால் சஞ்சு அவர்களின் வாய்ப்பை நிராகரித்தார். எதிர்காலத்தில் இதற்கு திட்டவட்டமான ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார் ” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த ட்விட்டுக்கு நேரடியாக சென்று பதில் அளித்த ரவிச்சந்திரன் அஸ்வின் “இது பொய்யான செய்தி. என் பெயரை வைத்து பொய் சொல்லாதீர்கள்!” என மிகக் காட்டமாக அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக ருதுராஜ் தயாராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.