பல கேட்சிகளை விட்டு ரசிகர்களைப் பதைக்க வைத்து இறுதியில் பெங்களூரை வீழ்த்தியது சிஎஸ்கே!

0
624
Csk

பதினாறாவது ஐபிஎல் சீசனில் இன்று சென்னை பெங்களூர் அணிகள் மோதிக்கொண்ட மிக பரபரப்பான போட்டி தற்பொழுது பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று முடிவடைந்து இருக்கிறது!

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு ருதுராஜ் 3 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ரகானே 37, கான்வே 83, சிவம் துபே 52, அம்பதி ராயுடு 14, ஜடேஜா 10, மொயின் அலி 14, மகேந்திர சிங் தோனி 1 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை அணி 226 ரன்கள் குவித்தது. முகமது சிராஜ் நான்கு ஓவர்கள் பந்துவீசி 30 ரன்கள் விட்டுத்தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதை அடுத்து மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூர் அணிக்கு விராட் கோலி 6, லோம்ரர் 0 என இரட்டை ஏமாற்றம் வந்தது. ஆனால் இதற்கு அடுத்த ஜோடி சேர்ந்த கேப்டன் பாப் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் சென்னை அணிக்கு திருப்பி பதிலடி தர ஆரம்பித்தார்கள்.

மிகச் சிறப்பாக விளையாடிய இவர்கள் 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெங்களூர் அணி வெற்றி பெறுவதற்கான எல்லா வேலைகளையும் செய்து கொடுத்தார்கள். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 36 பந்தில் மூன்று பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 76 ரன்கள், கேப்டன் பாப் 33 பந்தில் ஐந்து பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

ஆட்டத்தில் 14 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில் அடுத்த ஆறு ஓவர்களுக்கு 68 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் 14 பந்தில் 28 ரன்கள், ஷாபாஷ் அகமத் 10 பந்தில் 12 ரன்கள், பர்னல் ஐந்து பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இலங்கையின் இளம் வீரர் மதிஷா பதிரனா மிகச் சிறப்பாக பந்துவீசி சுயாஸ் பிரபுதேசாய் விக்கட்டை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை அணியை எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். நான்கு ஓவர்கள் பந்துவீசிய அவர் 42 ரன்கள் விட்டுத் தந்து இரண்டு விக்கட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

ஐந்தாவது ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். ஐந்தாவது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூர் அணிக்கு இது மூன்றாவது தோல்வி ஆகும். இந்த சீசனில் சென்னை அணியின் வெற்றி கடந்த சீசனை விட நன்றாக துவக்கத்திலேயே அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!