நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 10 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நேற்றைய போட்டியில் காயம் அடைந்த சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே குறித்து சிஎஸ்கே பேட்டிங் கோச் மை கேர்ள் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணியில் நம்பிக்கை வீரராக கருதப்பட்ட இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே 13 பந்துகளில் 30 ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார்.
ஆனால் விளையாடிக் கொண்டிருந்த போது மைதானத்திலேயே நடக்க முடியாமல் சிரமப்பட்டது தெரிந்தது. இதனால் அவசரப்பட்டு அதிரடியாக விளையாடி தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இந்த சூழ்நிலையில் அவரது காயம் குறித்து தற்போது பேட்டி அளித்திருக்கும் சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக்கேல் ஹசி, மாத்ரேவுக்கு தசை நார் கிழிந்து இருப்பதாகவும், இது அணிக்கு ஒரு பெரிய இழப்பு என்று பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “ஆயுஷ் மத்ரேவின் தொடைப் பின்பகுதித் தசையில் கிழிவு ஏற்பட்டுள்ளது. அது எந்த அளவிற்கு தீவிரமானது என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் ஸ்கேன் செய்து பார்க்க உள்ளோம். ஆனால் துரதிஷ்டவசமாக அது மிகவும் மோசமாக தெரிகிறது. இதனால் அது எங்களுக்கு ஒரு பெரிய இழப்பாக அமையக்கூடும்” என்று பேசி இருக்கிறார்.
இது தற்போது சிஎஸ்கே ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த இரண்டு போட்டிகளாக சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கு அவரது பேட்டிங் மிக முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. எனவே ஒரு சிறந்த வீரர் காயம் அடைந்து வெளியேறி இருப்பது சிஎஸ்கே அணியை மேலும் சிக்கலில் தள்ளக் கூடும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள். எனவே இனி இதை சிஎஸ்கே எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






