வார்னர் முதல் 3 இந்திய வீரர்கள் வரை.. 2023-ல் ஓய்வுபெற்ற 14 நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்.. முழு பட்டியல்

0
179

2023ஆம் ஆண்டு இந்திய அணியை பொறுத்தவரை சோகம் நிறைந்த ஆண்டாகவே அமைந்துள்ளது. 10வது முறையாக ஐசிசி தொடரை வெல்ல முடியாமல் இந்திய அணி வீரர்கள் கண்ணீருடன் ஆண்டை நிறைவு செய்துள்ளனர். 2023ல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி மற்றும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி ரசிகர்களுக்கு ஆறாத வடுவாக உள்ளது.

அதேபோல் 2023ல் ஏராளமான வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த 3 வீரர்கள் உட்பட மொத்தமாக 14 வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். அந்த வகையில் நடப்பாண்டில் முதல் வீரராக ஓய்வை அறிவித்தது தென்னாப்பிரிக்கா அணியின் டுவைன் ப்ரிடோரியஸ் தான். அந்த அணிக்காக 3 டெஸ்ட், 27 ஒருநாள் மற்றும் 30 டி20 போட்டிகளில் விளையாடிய அவர், திடீரென ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

- Advertisement -

அதன்பின் ஜனவரி 30ஆம் தேதி இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்த முரளி விஜய் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய அணிக்காக 61 டெஸ்ட், 17 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் முரளி விஜய் விளையாடியுள்ளார். அதிலும் டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்கள், 15 அரைசதங்கள் உட்பட கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இந்திய அணியின் தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்டார்.

அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் கிறிஸ்டியன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 11 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா அணிக்காக ஆடி வந்த அவர், 23 டி20 போட்டிகள் மற்றும் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதேபோல் 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை வீசிய ஜோகிந்தர் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர் இந்திய அணிக்காக 4 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

2023 பிப்ரவரி முதல் வாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 2011ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடி வந்த ஃபின்ச், ஒருநாள் கிரிக்கெட்டில் 5,406 ரன்களையும், டி20 கிரிக்கெட்டில் 3,120 ரன்களையும் சேர்த்துள்ளார். அதேபோல் இங்கிலாந்து டெஸ்ட் ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் அண்மையில் முடிந்த ஆஷஸ் தொடருடன் ஓய்வை அறிவித்தார். இவர் இங்கிலாந்து அணிக்காக 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 604 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதேபோல் இங்கிலாந்து அணியின் மொயின் அலியும் ஆஷஸ் தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் வேண்டுகோளுக்கு இணங்க மொயின் அலி மீண்டும் களமிறங்கி இருந்தார். அதேபோல் தென்னாப்பிரிக்கா விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் உலகக்கோப்பை தொடருக்கு பின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

தென்னாப்பிரிக்கா அணிக்காக 155 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6,770 ரன்களையும் விளாசி இருக்கிறார். அதேபோல் உலகக்கோப்பை தொடருடன் ஆஃப்கானிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதுவரை 15 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள அவர் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். டி காக் மற்றும் நவீன் உல் ஹக் இருவருமே டி20 லீக்குகளில் விளையாடுவதற்காக ஓய்வை அறிவித்தனர்.

அதேபோல் இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தனர். அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதேபோல் இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடிய மனோஜ் திவாரியும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். மேலும், நேபாள அணியின் கேப்டம் மல்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.