கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடித்த 5 வீரர்கள்

0
2319
Chris Gayle

கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரையில் நிறைய சாதனைகள் நாம் கேள்விப்பட்டிருப்போம். மூன்று பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை கைபற்றி ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றுவது, அதிவேக 50 ரன்கள் குவிப்பது அதேபோல அதிவேக 100 ரன்கள் குவிப்பது இப்படி அடுக்கடுக்காக நிறைய சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

அதில் பேட்ஸ்மேன்களை பொறுத்தவரையில் மிகவும் கடினமான சாதனைகள் பார்க்கப்படுவது ஒரு ஓவரில் 6 பந்துகள் 6 சிக்ஸர்கள் அல்லது 6 பவுண்டரிகள் அடிப்பது தான். மிகவும் நிதானமாக அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு அல்லது சிக்சர்களுக்கு விரட்ட வேண்டும். நம் இந்திய வீரர் யுவராஜ் சிங் உலக கோப்பை டி20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 6 பந்துகளையும் சிக்ஸருக்கு அடுத்தது ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

தற்பொழுது அதேபோல ஒரு ஓவரில் 6 பந்துகளில் மேற்கொண்டு அந்த ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டிய வீரர்களை பற்றி தற்போது பார்ப்போம்.

1. திலகரத்னே தில்ஷன்

Tillakaratne Dilshan

இலங்கையை சேர்ந்த அதிரடியான கிரிக்கெட் வீரரான இவர் 17 ஆண்டு காலம் இலங்கை அணிக்காக விளையாடி இருக்கிறார். மொத்தமாக ஒரு நாள் போட்டிகளில் 10, 290 ரன்களும் டெஸ்ட் போட்டிகளில் 6000 ரன்களுக்கு மேலும் குவித்திருக்கிறார்.

இந்த குறிப்பிட்ட சாதனையை இவர் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நிகழ்த்தி காட்டினார். முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 376 ரன்கள் குவித்து இருந்தது. அதன் பின்னர் விளையாடிய இலங்கை அணி முதல் 5 ஓவர்களில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் குவித்து இருந்தது. அதன் பின்னர் மிட்செல் ஜான்சன் பந்து வீச வந்தார்.

அவர் வீசிய ஓவரில் அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி தில்ஷன் அசத்தினார். அத்தோடு மட்டும் நின்று விடாமல் 60 பந்துகளில் 62 ரன்கள் குவித்து சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். அந்த போட்டியில் இவரை தொடர்ந்து சங்கக்காரா சதம் அடித்து அசத்தினார்.

இருப்பினும் இறுதியில் இலங்கை அணியால் 50 ஓவர் முடிவில் 312 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக இறுதியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.

2. கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயில் சிக்சருக்கு தான் பெயர் போனவர் என்று நிறைய பேர் நினைத்திருப்பார்கள் ஆனால் அவர் இந்த சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார். அதேபோல அனைவரும் இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் தான் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நினைப்பார்கள். ஆனால் கிறிஸ் கெய்ல் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7000’துக்கும் மேற்பட்ட ரன்களை இதுவரை குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டியில் இவருடைய பேட்டிங் ஆவரேஜ் 42.19 ஆகும்.

2004ம் ஆண்டு நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணி 470 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஸ்டீவ் ஹர்மிசன் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் தங்களது அனைத்து விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து பறிகொடுத்தனர்.

இதன் காரணமாக ஃபாலோ ஆனாகி மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்ய வந்தது. அப்பொழுது தன்னுடைய திறமையை நிரூபித்தார். மேத்யூ ஹோகர்ட்ஸ் வீசிய ஓவரில் சினம் கொண்ட கெயில் ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவர் அவ்வாறு விளையாடிய விதம் அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியப்பட வைத்தது.

3. அஜிங்கியா ரஹானே

Ajinkya Rahane ODI

தற்போதைய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயலாற்றி வரும் அஜின்கியா ரஹானே இந்த சாதனையை தனது பெயருக்கு பின்னால் வைத்து இருக்கிறார். 2014ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் முதன்முறையாக களமிறங்கிய போட்டியிலேயே, இவர் சதம் அடித்து அசத்தினார். அந்த இன்னிங்ஸ் எப்பொழுதும் இந்திய ரசிகர்கள் நினைவில் இருந்து கொண்டே இருக்கும்.

2012ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிராக இவர் விளையாடினார். அப்பொழுது பெங்களூர் அணியில் பௌலிங் விசா ஸ்ரீநாத் அரவிந்த் வந்தார். அவருடைய ஓவரில் ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு அஜிங்கிய ரஹானே விரட்டினார்.

அதோடு மட்டும் நின்று விடாமல் போட்டியின் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 103 ரன்கள் அஜிங்கிய ரஹானே குவித்து இருந்தார். இவருடைய அதிரடி காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 195 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் விளையாடிய பெங்களூரு அணி 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டியின் முடிவில் ஆட்டநாயகன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

4. ராம்நரேஷ் சர்வான்

Ramnaresh Sarwan

மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ராம்நரேஷ் சர்வான் அடிப்படையில் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். இவர் தனது கிரிக்கெட் கேரியரில் 181 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5804 ரன்கள் குவித்திருக்கிறார்.

2006ஆம் ஆண்டு இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் ஒரு போட்டியில் ராம்நரேஷ் சர்வான் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளும் சமனில் முடிவடைந்தது. அதன் பின்னர் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதலில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடியது.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் (23 ஜுன் 2006) தன்னுடைய 26வது பிறந்த நாளில் முனாஃப் பட்டேல் வீசிய ஓவரில் அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி ராம்நரேஷ் சர்வான் இந்த சாதனையை நிகழ்த்தி அசத்தினார். அந்த போட்டியில் இவர் சதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. இறுதியில் அந்த போட்டியும் முதல் இரண்டு போட்டிகளை போலவே சமனில் முடிவடைந்தது.

வெற்றியை தீர்மானிக்கும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்கிற கணக்கில் கைப்பற்றியது.

5. பிருத்வி ஷா

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய இளம் கிரிக்கெட் வீரராக நாளுக்கு நாள் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திக் கொண்டே வருகிறார். இவரது இந்த சாதனையை இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் பார்த்த அனைவரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் ஷா இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினார். முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 153 ரன்கள் மட்டுமே குவித்து இருந்தது. 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் வீரர் பிருத்வி ஷா முதல் ஓவரிலேயே 6 பந்துகளையும் பவுண்டரிக்கு அடித்து கொல்கத்தா அணியை கதி கலங்க வைத்தார்.

மேலும் அந்த போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து, 42 பந்துகளில் மொத்தமாக 81 ரன்கள் குவித்து கிட்டத்தட்ட வெற்றியை இவரே உறுதிப்படுத்து விட்டார். இவரது சக வீரர் தவானும் 46 ரன்கள் குவிக்க, டெல்லி அணி 17-வது ஓவரிலயே 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.